போரை நிறுத்தும் மோடி வினாத்தாள் கசிவை நிறுத்த மாட்டாரா - நீட் விவகாரத்தில் ராகுல் காந்தி
கேள்வி நீட் தேர்வில் வினாத்தாள் வெளியானது குறித்து ராகுல் காந்தி பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியுள்ளார்.
நீட் தேர்வு
கடந்த மே 5 ம் தேதி, 571 நகரங்களில் உள்ள 4,750 மையங்களில் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வின் (NEET-UG) நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி வெளியிடப்பட்டன. இதில், மதிப்பெண்களின் குளறுபடியால், ஹரியானாவில் உள்ள ஒரே தேர்வு மையத்தைச் சேர்ந்த 6 பேர் உட்பட 67 பேர் முதல் தரவரிசையைப் பெறுவதற்கு வழிவகுத்ததாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
தேர்வுக்கு முன்பே வினாத்தாள் வெளியானதாகவும் குற்றச்சாட்டு இருந்தது. இது குறித்து பாஜக கூட்டணியில் உள்ள சிவசேனா கட்சியே மகாராஷ்டிரா மாநில மாணவர்கள் நீட் தேர்வினால் பாதிப்படைந்துள்ளது, தேர்வை ரத்து செய்ய வேண்டுமென தெரிவித்தது. மேலும் நாடு முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 1,563 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்களை ரத்து செய்ததோடு அவர்களுக்கு 23ம் தேதி மறு தேர்வு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
ராகுல் காந்தி
இந்நிலையில் டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது,
பாரத் ஜாடோ யாத்திரையின் பயணத்தின் போது, ராஜஸ்தானில் சில மாணவர்கள் நீட் தேர்வில் முறைகேடு நடப்பதாக என்னிடம் தெரிவித்தனர். 2 கோடிக்கு மேற்பட்ட மாணவர்கள் நீட் மோசடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் இது அதிகம் நடைபெறுகிறது. கடந்த 7 ஆண்டுகளில் 70க்கு மேற்பட்ட முறை வினாத்தாள் கசிவு ஏற்பட்டுள்ளது.
வியாபம் ஊழல்
மத்தியப் பிரதேசத்தில் வியாபம் தேர்வு மற்றும் ஆள்சேர்ப்பு ஊழல் பற்றிக் குறிப்பிட்ட ராகுல் காந்தி, வியாபம் ஊழல், நாட்டின் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்று நீட் முறைகேடு சர்ச்சையைப் பற்றி கூறியுள்ளார். எதையும் தன்னிச்சையாக செய்யக்கூடாது, ஒரு தாளுக்கு பொருந்தும் விதிகள் மற்றொன்றுக்கு பொருந்தும். நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் என்றார் ராகுல் காந்தி.
மேலும் ரஷ்யா-உக்ரைன் போரை பிரதமர் மோடி தடுத்து நிறுத்தினார் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து வினாத்தாள் கசிவு ஏற்படுகிறது. ஆனால் பிரதமர் மோடியால் அதனை தடுத்து நிறுத்த முடியவில்லை அல்லது சில காரணங்களால் அவர் நிறுத்த விரும்பவில்லை. முதலில் இந்தியாவில் தேர்வு வினாத்தாள் கசிவை நிறுத்துங்கள் என தெரிவித்தார்.