நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்யவேண்டும் - போர்க்கொடி தூக்கிய ஆளும் பாஜக கூட்டணி அரசு!

Nationalist Congress Party M. K. Stalin Maharashtra NEET
By Karthikraja Jun 08, 2024 12:41 PM GMT
Report

 பாஜக கூட்டணியில் உள்ள மகாராஷ்டிரா அரசிலிருந்தே நீட் தேர்வுக்கு எதிராக எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

நீட் தேர்வு

கடந்த மே 5 ம் தேதி, 571 நகரங்களில் உள்ள 4,750 மையங்களில் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வின் (NEET-UG) நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி வெளியிடப்பட்டன. இதில், மதிப்பெண்களின் குளறுபடியால், ஹரியானாவில் உள்ள ஒரே தேர்வு மையத்தைச் சேர்ந்த 6 பேர் உட்பட 67 பேர் முதல் தரவரிசையைப் பெறுவதற்கு வழிவகுத்ததாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

Hasan Mushrif

இதுகுறித்து பேசிய மகாராஷ்டிர மருத்துவ கல்வி அமைச்சர் ஹசன் முஷ்ரிப், “நீட் தேர்வு பணம் வாங்கிக் கொண்டு நடத்தப்பட்டிருக்கலாம். மகாராஷ்டிராவைச் சேர்ந்த எந்த ஒரு மாணவரும் மாநிலத்தில் உள்ள அரசு அல்லது தனியார் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் படிப்புக்கு சேர்க்கைப் பெற மாட்டார்கள் என்பதைத்தான் தேர்வு முடிவுகள் காட்டுகின்றன.

மேலும், பல மாணவர்களின் பெற்றோர்கள் இப்பிரச்சினைக்குத் தீர்வுகாணக் கோரி தன்னை அணுகியதாகவும், இந்த நீட் தேர்வு முடிவுகள் மகாராஷ்டிராவுக்கு அநீதியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், நீட் தேர்வு உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும். இதுகுறித்து தேசிய மருத்துவ கவுன்சிலிடம் (NMC) கூற உள்ளோம். இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தை அணுகுவது குறித்தும் மகாராஷ்டிரா அரசாங்கம் ஆலோசித்து வருவதாக ஹசன் முஷ்ரிப் கூறினார்.

நீட் தேர்வு - மாணவிகளின் உள்ளாடையை கழட்டச் சொன்ன கொடுமை!

நீட் தேர்வு - மாணவிகளின் உள்ளாடையை கழட்டச் சொன்ன கொடுமை!

தேசிய தேர்வு முகமை

ஆனால், தேசிய தேர்வு முகமை (NTA), இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது மற்றும் என்.சி.இ.ஆர்.டி (NCERT) பாடப்புத்தகங்களில் செய்யப்பட்ட மாற்றங்கள் மற்றும் தேர்வு மையங்களில் நேரத்தை இழப்பதற்கான கருணை மதிப்பெண்கள் ஆகியவை தான் மாணவர்கள் சிலர் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு காரணங்கள் என்று கூறியுள்ளது. 

sanjay moorthi

மேலும், "நீட் தேர்வு புகார் தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்கப்படும். விசாரணைக்குழு ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யும்" என மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் சஞ்சய் மூர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின்

இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். அதில் "வினாத்தாள் கசிவுகள், குறிப்பிட்ட மையங்களில் அதிக முதலிடம் பெற்றவர்கள், கணித ரீதியாக சாத்தியமில்லாத கருணை மதிப்பெண்கள் என்ற போர்வையில் மதிப்பெண்கள் வழங்குதல் போன்றவை, தற்போதைய மத்திய அரசின் மையப்படுத்தலின் குறைபாடுகளை எடுத்துக்காட்டுகின்றன.

இந்த நிகழ்வுகள், தொழில்முறைப் பாடத் தேர்வுக்கான அளவுகோல்களை நிர்ணயிப்பதில் மாநில அரசுகள் மற்றும் பள்ளிக் கல்வி முறையின் முக்கியத்துவத்தை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன” என்றுதனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

எதிர் கட்சிகள் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொண்டிருந்த நிலையில், தற்போது பாஜக கூட்டணியில் உள்ள மகாராஷ்டிரா அரசிலிருந்தே நீட் தேர்வுக்கு எதிராக குரல்கள் வர தொடங்கியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.