எலும்பை உறைய வைக்கும் குளிர்: ஆனாலும் டி-ஷர்ட் மட்டுமே அணிவது ஏன் - ராகுல்காந்தி வேதனை
கடுமையான குளிரிலும் டி-ஷர்ட் அணிவது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார்.
ராகுல் காந்தி
வட இந்தியாவில் இந்திய ஒற்றுமைப் பயணத்தை நடத்தி வரும் ராகுல் காந்தி, குளிர் காலத்திலும், ஸ்வெட்டர் அணியாமல், டி-ஷர்ட் மட்டுமே அணிந்தபடி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இதுகுறித்து அவர் விளக்கம் அளித்ததில், மத்தியப் பிரதேசத்தில் சில நாட்களுக்கு முன்பு மூன்று ஏழைச் சிறுமிகளைப் பார்த்தேன்.

நான் அவர்களை என்னுடன் அரவணைத்த போது அவர்கள் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தனர். அன்று ஒரு முடிவு எடுத்தேன். என்னால் தாங்க முடியாமல் நடுங்க வைக்கும் குளிர் என்னை வாட்டும் வரை டி-ஷர்ட் மட்டுமே அணிவது என்று முடிவு செய்து கொண்டேன்.
திட்டவட்டம்
அன்று குளிரில் நடுங்கிய சிறுமிகளுக்கு நான் ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன். நீங்கள் குளிரில் நடுங்கும் போது நானும் குளிரில் நடுங்குவேன். நீங்கள் ஸ்வெட்டர் அணிந்து கொள்ளும் சூழல் வரும் நாளன்று நானும் ஸ்வெட்டர் அணிந்து கொள்வேன் என்பதே அந்த செய்தி.
ஊடகங்கள் நான் டி-ஷர்ட் அணிவதை தான் விமர்சிக்கின்றன. ஆனால் என்னோடு யாத்திரையில் கிழிந்த ஆடையில் நடக்கும் விவசாயிகள், தொழிலாளர்களைப் பற்றி எழுதுவதில்லை. நான் டி-ஷர்ட் அணிவது பிரச்சினையும் அல்ல, விவாதப் பொருளும் அல்ல.
உண்மையான பேசும் பொருள் விவசாயிகளும், ஏழைத் தொழிலாளர்களும், குழந்தைகளும் இன்னமும் ஏன் கிழிந்த ஆடைகளில், ஸ்வெட்டர் கூட இல்லாமல் தவித்து வருகின்றன என்பதே எனது கேள்வி எனத் தெரிவித்துள்ளார்.