வயநாடு தொகுதியை ராஜினாமா செய்தார் ராகுல் காந்தி?
கேரளா மாநிலம் வயநாட்டில் நடந்த பேரணியில் கலந்து கொண்டார் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி
ரேபரேலி
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ரேபரேலி மற்றும் கேரளா மாநிலத்தில் உள்ள வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலுமே வெற்றி பெற்றார்.
ஏதாவது ஒரு தொகுதியில் மட்டுமே எம்.பியாக இருக்க முடியும் என்பதால் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் ராகுல் காந்தி. இந்நிலையில் நேற்று(11.06.2024) ரேபரேலி சென்று வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பேரணியில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, இன்று வயநாடு சென்றுள்ளார்.
அரசியல் சாசனம்
தொடர்ந்து அங்கு நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது, நாட்டில் உள்ள ஒவ்வொரு வரலாறும் பாரம்பரியமும் நமது அரசியல் சாசனத்தை பாதுகாக்கிறது. அரசியல் சாசனம் எங்களது குரல். அதனை தொடாதீர்கள் என பிரதமரிடம் மக்கள் தெரிவித்துள்ளனர். தேர்தலுக்கு முன்னர், அரசியல் சாசனத்தை கிழிப்போம் என பாஜகவினர் பிரச்சாரம் செய்தனர். ஆனால் தேர்தலுக்கு பின் அரசியல் சாசனத்தை பிரதமர் வணங்குகிறார்.
வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி நூலிலையில் தான் வெற்றி பெற்றார். அங்கு அவர் தோற்கடிக்கப்பட்டு இருப்பார். ராமர் கோவில் கட்டப்பட்ட அயோத்தியில் பாஜக தோல்வி அடைந்துள்ளது. இதன் மூலம், வன்முறை மற்றும் வெறுப்புணர்வை நாங்கள் ஆதரிக்க மாட்டோம் என அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர் என பேசினார்.
குழப்பம்
மேலும், இரண்டாவது முறையாக என்னை வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி. அரசியல்சாசனத்தை பாதுகாக்கவே, 2024 நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. அன்பு மற்றும் பாசத்தால், வெறுப்புணர்வு தோற்கடிக்கப்பட்டுள்ளது, கருணையால் ஆணவம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
வயநாடு அல்லது ரேபரேலி தொகுதிகளில், எதில் எம்.பி.,யாக நீடிக்க வேண்டும் என்பதில் குழப்பம் உள்ளது. எந்த முடிவு எடுத்தாலும் இரு தொகுதி மக்களும் மகிழ்ச்சி அடைவார்கள். என ராகுல் காந்தி பேசினார்.
பெரோஸ் காந்தி, இந்திரா காந்தி, சோனியா காந்தி எம்.பி ஆக இருந்த தன் குடும்ப தொகுதியான ரேபரேலியில் ராகுல் காந்தி எம்.பி ஆக தொடர்வாரா அல்லது தொடர்ந்து இரண்டாம் முறையாக வெற்றி பெற வைத்த வயநாட்டில் எம்.பி ஆக தொடர்வாரா என பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.