மோடி தள்ளுபடி செய்த ரூ. 16 லட்சம் கோடி - மீட்கப்பட்டு மக்களுக்கு அளிக்கப்படும் - ராகுல் உத்தரவாதம்
மோடியின் நண்பர்களிடம் இருந்து மீட்கப்படும் பணம் மக்களிடம் பகிர்ந்தளிக்கப்படும் என உறுதி தெரிவித்துள்ளார் ராகுல் காந்தி.
ராகுல் உரை
காங்கிரஸ் கட்சி சார்பில் நாட்டின் தலைநகர் டெல்லியில் சமூக நீதி மாநாடு நடைபெற்றது. இதில் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அவர் பேசும் போது, 70 ஆண்டுகளுக்குப் பிறகு இது ஒரு முக்கியமான படியாகும் என குறிப்பிட்டு, இப்போது நிலைமை என்ன என்பதையும் எந்த திசையில் இனி பயணிக்க வேண்டும் என்பதையும் நாம் மதிப்பீடு செய்ய வேண்டும் என குறிப்பிட்டார்.
பிரதமர் பீதியடைந்ததை நீங்கள் பார்த்திருக்க வேண்டும் என்ற ராகுல், காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பிடித்திருக்கிறதா? என கேள்வி எழுப்பி இது ஒரு புரட்சிகர அறிக்கை என தெரிவித்தார்.
16 லட்சம் கோடி
மேலும், பிரதமர் மோடி தனது கோடீஸ்வர கூட்டாளிகளின் ரூ.16 லட்சம் கோடி மதிப்பிலான கடனை தள்ளுபடி செய்துள்ளார் என சுட்டிக்காட்டி, இந்தச் செயல், தேசத்தின் முக்கியமான வளங்களைக் கொள்ளையடிப்பது என்றும் சாடினார்.
தொடர்ந்து பேசிய அவர், இப்படி தள்ளுபடி செய்யப்பட்ட 16 லட்சம் கோடி ரூபாய் மீட்கப்பட்டு நாட்டின் 90% மக்களுக்கு பணத்தை பகிர்ந்தளிப்போம் என உறுதியளித்தார்.
பிரதமர் மோடி தள்ளுபடி செய்த பணம் இந்தியர்களின் துன்பத்தைத் தணிக்கப் பயன்படுத்தப்படுவதற்குப் பதிலாக, அதானி போன்ற தனிநபர்களின் செல்வத்தை உயர்த்துவதில் வீணடிக்கப்பட்டுள்ளது என்றும்ட் தெரிவித்தார்.