யார் அடிக்கபோகிறார்கள் என்பது தான்.. ஷகிப்பின் பேச்சுக்கு டிராவிட் பதிலடி!
ஷகிப்பின் சர்ச்சை பேச்சுக்கு டிராவிட் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
டி20 போட்டியில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி அபார வெற்றியை பதிவு செய்ய மூன்றாவது போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியிடம் தோல்வியடைந்தது. எனவே அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக்கொள்ள இன்று வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற நோக்கத்துடன் வங்கதேசத்தை எதிர்கொள்ளவுள்ளது.
ஷகிப்பின் சர்ச்சை பேச்சு
இந்நிலையில் போட்டிக்கு முன்னரே வங்காளதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் தெரிவிக்கையில், ஒவ்வொரு போட்டியும் எங்களுக்கு முக்கியமானது. நாங்கள் இந்த அணுகுமுறையுடன் விளையாட விரும்புகிறோம்.
நாங்கள் இங்கு உலக கோப்பையை வெல்ல வரவில்லை. இந்தியா போன்ற பெரிய அணியை வீழ்த்தி தாக்கம் ஏற்படுத்த வந்தோம். மேலும், உலகக்கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ள இந்திய அணியை நாங்கள் வீழ்த்தினால் அது பெரிய அதிர்ச்சி சம்பவமாக மாறும். எனவே எங்களுக்கு அது போதும்.
இந்திய அணியை வீழ்த்துவதற்கான வியூகங்கள் மற்றும் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என ஷகிப் அல் ஹசன் தெரிவித்தார். இவரின் பேட்டி பெரும் பேசும் பொருளாக மாற, இதற்கு இந்திய அணியின் பயிற்சியாளரான ராகுல் டிராவிட் பதில் அளித்துள்ளார்.
டிராவிட் பதிலடி
ராகுல் டிராவிட் பேசுகையில், வங்கதேச அணியை நாங்கள் பெரிதும் மதிக்கின்றோம். மேலும், உலகக்கோப்பையில் டி20 வடிவ கிரிக்கெட்டில் நம்மால் எதையுமே கணிக்க முடியாது. ஏனெனில், ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவும் 12 - 15 ரன்கள் வித்தியாசத்தில் தான் இருக்கும்.
கடைசி 2 பெரிய ஷாட்களை ஆடப்போவது யார் என்பது தான் இங்கு போட்டி. உண்மை சொல்லவேண்டும் என்றால் பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை அயர்லாந்து வீழ்த்தி இருந்தது. அதேபோன்று, டி20-ஐ பொறுத்தவரையில் யாரையும் குறைத்து மதிப்பிட முடியாது.
யார் வேண்டுமானாலும் கோப்பையை வெல்லலாம், இவர் தான், அவர் தான் என கூறுவது தவறாக தான் போகும் என ராகுல் டிராவிட் பதிலடி கொடுத்துள்ளார்.