தமிழ்நாட்டில் மட்டும் மது விலக்கு கொண்டு வர முடியாது - அமைச்சர் ரகுபதி
முதல்வர் மூலவர், துணை முதல்வர் உற்சவர் என அமைச்சர் ரகுபதி பேசியுள்ளார்.
ரகுபதி
தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டை மாவட்டத்தில் நியாய விலைக்கடை கட்டிடம் ஒன்றை திறந்து வைத்தார்.அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
துணை முதல்வர் குறித்த கேள்விக்கு, "தமிழக அரசின் திட்டங்கள் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைகிறதா என சரிபார்க்க கூடிய சிறப்பான முதல்வராக எங்கள் துணை முதலமைச்சர் இருப்பார்.
துணை முதல்வர்
தமிழக அரசின் அதிகாரிகளையும் சரி அரசு இயந்திரங்களையும் சரி சென்னையில் இருந்து முதல்வர் முடக்கி விட்டுக்கொண்டிருக்கிறார் என்றால் தமிழ்நாடு முழுவதும் சுற்றி அதை செயல்படுத்திக் கொண்டிருக்கிறார் துணை முதல்வர். முதல்வர் மூலவர், துணை முதல்வர் உற்சவர்" என பதிலளித்தார்.
மேலும், மது விலக்கு மாநாடு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாட்டில் திமுக சார்பாக ஆர்.எஸ்.பாரதியும், டி.கே.எஸ்.இளங்கோவனும் கலந்து கொள்வார்கள். மதுவை ஒழிக்க வேண்டும் என்பதுதான் திமுகவின் கொள்கையும் கூட.
மது விலக்கு
இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் மது விலக்கு கொண்டுவரப்பட்டால் தமிழ்நாட்டிலும் மது விலக்கு அமல்படுத்தப்படுத்துவதில் எங்களுக்கு எந்த சிக்கலும் இல்லை. ஆனால் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடக, கேரள மாநிலங்களில் மது விற்பனை இருக்கும் போது தமிழ்நாட்டில்மட்டும் மது விலக்கு கொண்டு வர முடியாது.
அவ்வாறு செய்தால் இங்கு இருந்து அங்கு சென்று மது அருந்தி விட்டு வருவார்கள். கள்ளச்சாராயம் பெருகும். மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக நாடு முழுவதும் மது விலக்கை கொண்டு வந்தால் முதல்வர் ஸ்டாலின் முழு ஆதரவையும் தருவார்" என பேசியுள்ளார்.