உக்ரைனுடன் போரை நிறுத்த தயார்; ஆனால்..ஒரு கண்டிஷன் - புதின் போடும் பிளான்!
உக்ரைனுடனான போரை நிறுத்த சில நிபந்தனைகளை ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
உக்ரைனுடன் போர்
கடந்த 2 வருடங்களுக்கு மேலாக உக்ரைன் – ரஷ்யா இடையே போர் நீடித்து வருகிறது. இதில், உக்ரைனை நிலம், நீர் உள்ளிட்ட பகுதிகளில் சூழ்ந்து கொண்டு மீண்டும் ரஷ்யா தீவிர தாக்குதலைத் தொடுத்து வருகிறது.
இதனிடையே, ரஷ்ய அதிபர் தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளுடன் விளாடிமிர் புதின், 5வது முறையாக அதிபராக கடந்த மே 7ஆம் தேதி பொறுப்பேற்றார். இந்த சூழலில், இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் அமைதி பேச்சுவார்த்தைக்கு வலியுறுத்தி வருகிறது.
புதின் பிளான்
இத்தாலியில், ஜி-7 உச்சி மாநாடு நடைபெறுகிறது.அதில் உலக தலைவர்கள் பங்கேற்றுள்ள நிலையில், உக்ரைனுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின் சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், உக்ரைன் இதைச் செய்தால் போர் நிறுத்தத்திற்குத் தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறியுள்ளார்.
அதாவது, ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் உரையாற்றிய விளாடிமிர் புதின் கூறியதாவது, “கெய்வ் பகுதி உள்ளிட்ட நான்கு ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரேனிய பிராந்தியங்களிலிருந்து துருப்புக்களை வாபஸ் பெற்றால்,
வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பில் சேரும் திட்டத்தைக் கைவிட்டால் உடனடியாக போர் நிறுத்தத்திற்கு உத்தரவிடத் தயார். நாங்கள் அதை உடனடியாக செய்வோம்” என கூறியுள்ளார்.