“உக்ரைனில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்” - ரஷ்ய அதிபர் புதின் உறுதி
உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் பல ஆண்டுகளாக மோதல் இருந்து வரும் நிலையில் ரஷ்ய ராணுவத்துக்கு அதிபர் புதின் நேற்று அதிகாலை உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுக்க அதிரடியாக உத்தரவிட்டார்.
இந்த அறிவிப்பை புதின் தொலைக்காட்சியில் உரையாடியபோது தெரிவித்தார். அவர் பேசிய சிறிது நேரத்திலேயே உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதலை தொடங்கின.
உக்ரைன் தலைநகர் கீவ், கார்கிவ், டோனஸ்க் , மைக்கோல், மரியூபோல் மற்றும் கிழக்கு உக்ரைனின் நகரங்களில் ரஷ்ய ராணுவம் குண்டுமழை பொழிந்தது மும்முனை தாக்குதல் நடத்தி வருகிறது.
ரஷ்யாவின் இந்த தாக்குதல்களுக்கு உலக நாடுகளும் பல்வேறு சர்வதேச அமைப்புகளும் தங்களது கண்டனகங்களை தெரிவித்திருந்தனர்.
மேலும் உடனடியாக தாக்குதலை கைவிடுமாறும் கோரிக்கை விடுத்தனர். எதையும் பொருட்படுத்தாத ரஷ்யா இரண்டாவது நாளான இன்றும் உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது.
இந்நிலையில் ரஷ்யாவுடனான முதல்நாள் போரில் 137 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.
மேலும், உக்ரைனில் உள்ள இந்தியர்களின் உதவிக்காக டெல்லியில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
அதன்படி இந்தியர்கள் உதவிக்கு 1800118797 என்ற எண்ணில் டெல்லியிலுள்ள சிறப்பு கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம் என வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
அதைபோல் உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்கும் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. +91 11 23012113 +91 11 23014104 +91 11 23017905 ஆகிய எண்களை இந்திய மக்கள் தொடர்புகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உக்ரைன் நாட்டில் சிக்கி தவிக்கும் இந்திய மாணவர்களை மீட்க உக்ரைன் சென்ற ஏர் இந்தியா விமானம் போர் நடப்பதால் பாதிவழியில் திருப்பிவிடப்பட்டது.
இதனால் உக்ரைனிலுள்ள இந்திய துாதரக வளாகத்தில் மாணவர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
மாணவர்களை பத்திரமாக மீட்க அரசு மாற்று நடவடிக்கைகளை ஆலோசித்து வருவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இது குறித்து மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார்.
இந்நிலையில் உக்ரைனில் சிக்கிதவிக்கும் தமிழக மாணவர்கள் பத்திரமாக தாயகம் திரும்புவதற்கான முழு செலவையும் அரசே ஏற்கும் என அறிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, உக்ரைனில் உள்ள மாணவர்கள் மற்றும் இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என ரஷ்ய அதிபர் புதின் உறுதியளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று இரவு தொலைப்பேசியில் இந்திய பிரதமர் மோடியிடம் பேசிய ரஷ்ய அதிபர் இதனை தெரிவித்ததாக கூறப்படுகிறது.