தனியறை.. மனைவியுடன் தனிமை - சிறையில் கைதிகளுக்கு அரசு அனுமதி!
கைதிகள் தங்களது மனைவிகளை சிறையின் உள்ளேயே சந்திப்பதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது.
பஞ்சாப் சிறை
பஞ்சாபில் அமைந்துள்ளது லூதியானா. இங்குள்ள சிறையில் கைதிகளின் திருமண பந்தத்தை வலுப்படுத்தும் விதமாக புதிய முன்னெடுப்பை பஞ்சாப் அரசு எடுத்துள்ளது. அதில், சிறையில், கைதிகள் தங்களது மனைவிகளை சிறையில் இதற்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள தனி அறையில் சந்திக்கலாம்.
அந்த அறையிலே பாத்ரூம் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இவ்வாறு கைதிகள் தங்களது மனைவியை சந்தித்துக்கொள்ளலாம். கைதிகள் தங்களது மனைவிகளை தனியாக சந்தித்துக்கொள்வதற்கு 2 மணிநேரம் அவகாசம் வழங்கப்படுகிறது.
சிறப்பு சலுகை
நல்லொழுக்கத்துடன் நடந்து கொள்ளும் கைதிகளுக்கு மட்டுமே இந்த சலுகை அளிக்கப்படுகிறது. மேலும், நீண்டகாலமாக சிறையிலே வசிக்கும் கைதிகளுக்கு இந்த சலுகையில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் சிறை நிர்வாகம் கூறியுள்ளது.
கொடூரமான குற்றங்கள் செய்தவர்கள், தாதாக்கள், மிகவும் ஆபத்தான கைதிகள், பாலியல் குற்றத்தில் சிக்கிய குற்றவாளிகள் ஆகியோருக்கு இந்த சலுகைகள் அளிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தனியறை
இதன் அடிப்படையில், தங்களது கணவர்களை சந்திக்கச் செல்லும் மனைவிகள் திருமணம் ஆனதற்கான ஆதாரம், மருத்துவச் சான்றிதழ், ஹெச்.ஐ.வி. இல்லா சான்றிதழ், பாலியல் தொடர்பான நோய் இல்லை என்பதற்கான ஆதாரம்,
கொரோனா சான்றிதழ் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
நாட்டிலே இந்த திட்டத்தை முதன்முறையாக தொடங்கியுள்ள மாநிலம் என்ற பெருமையை பஞ்சாப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.