2 பேரும் பொண்ணுன்னே தெரியாது; தன்பாலின ஜோடிக்கு திருமணம் - மதகுரு பணிநீக்கம்!
தன்பாலின ஜோடிக்கு திருமணம் செய்துவைத்த மதகுரு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தன்பாலின திருமணம்
பஞ்சாப், பதிந்தா நகரில் வசிப்பவர் மணிஷா(21). இவரின் தோழி டிம்பிள்(27). இருவரும் சண்டிகர் அருகில் ஆயத்த ஆடை தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றில் சேர்ந்து வேலை செய்தபோது காதலித்து வந்துள்ளனர்.
தன்பாலின ஈர்ப்பாளராக இருந்த நிலையில் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். தொடர்ந்து பெற்றோரிடம் கூறியதில் முதலில் மறுப்பு தெரிவித்து பின் சம்மதித்துள்ளனர். மேலும், உள்ளூர் சீக்கிய குருத்வாராவில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
மதகுரு டிஸ்மிஸ்
பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் என 70 பேர் இத்திருமணத்தில் கலந்துகொண்டனர். அவர்களுக்கு சீக்கிய மதகுரு ஹர்தேவ் திருமணம் செய்து வைத்தார். அதனையடுத்து இத்திருமணம் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
உடனே, இதுகுறித்து சீக்கிய மத குருக்களின் தலைவரான ரக்பீர் சிங் அளித்த பேட்டியில், ''தன்பால் திருமணம் இயற்கைக்கு மாறானது. சீக்கிய கோட்பாடுகளுக்கு எதிரானது. அந்தத் தம்பதிக்கு திருமணம் செய்து வைத்த மதகுருமார்களை சஸ்பெண்ட் செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
அதன்பின், ஹர்தேவ் சிங் உட்பட 4 பேர் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதுபற்றி ஹர்தேவ் கூறுகையில், ''மணமகன், மணமகள் இருவரும் பெண்கள் என்பதை என்னால் அடையாளம் காணமுடியவில்லை. மணமகன் கோலத்தில் இருந்தவர் டர்பன் அணிந்திருந்தார்'' என்றார்.
இந்நிலையில் டிம்பிள், ''திருமணத்திற்கு முன்பு எங்கள் இருவரது அடையாள அட்டைகளை குருத்வாராவில் கொடுத்திருந்தோம். எனவே இதில் குழப்பத்திற்கு வாய்ப்பே இல்லை'' என்று தெரிவித்துள்ளார்.