அதிக வேலை; உயிரிழந்த 26 வயது பெண் - கம்பெனியில் இருந்து ஒருவர் கூட வராத கொடுமை!
26 வயது இளம்பெண் பணி சுமையால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பணிச்சுமை
கேரளாவைச் சேர்ந்தவர் அன்னா செபாஸ்டியன்(26). சி.ஏ படித்து முடித்துள்ளார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு புனேயில் உள்ள பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் முதல் முறையாக வேலைக்குச் சேர்ந்துள்ளார்.
ஆனால், 4 மாதத்தில் அப்பெண் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். தொடர்ந்து, மகள் பணி அழுத்தம் காரணமாகத்தான் இறந்தார் என்று அன்னாவின் தாயார் அனிதா குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக நிறுவனத்தின் உரிமையாளர் ராஜீவ் மிமாமி என்பவருக்கு அன்னாவின் தாயார் அனிதா அனுப்பியுள்ள இமெயிலில்,
''அன்னாவின் மேலாளர் கிரிக்கெட் போட்டியின் போது நாள் முடியும் நேரத்தில்தான் வேலை கொடுப்பார். இதனால் எனது மகளுக்கு மன அழுத்தம் ஏற்பட்டது. இரவு நேரத்தில், விடுமுறை நாள்களில் கூட வேலை கொடுப்பார். அதிகப்படியான வேலை இருப்பதாக அன்னா எங்களிடம் தெரிவித்தார்.
இளம்பெண் மரணம்
கூடுதல் வேலையை கொடுத்து குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்கும்படி கேட்பார். நான் இது போன்ற வேலைகளை எடுத்துக்கொள்ளவேண்டாம் என்று சொல்வேன். ஆனால் அவரது மேலாளர் தொடர்ந்து வேலை கொடுத்துக்கொண்டே இருந்தார். அன்னாவிற்கு ஓய்வெடுக்கக்கூட நேரம் இல்லை.
இரவு, விடுமுறை நாளில் கூட வேலை செய்து கொண்டிருப்பார். ஒரு முறை அவரது கம்பெனி உரிமையாளர் இரவில் வேலையை கொடுத்துவிட்டு காலைக்குள் முடிக்கும்படி கூறினார். மற்றொரு முறை அன்னாவின் உதவிமேலாளர் இரவில் வேலையை கொடுத்துவிட்டு அடுத்த நாள் காலைக்குள் முடித்துக்கொடுக்கும்படி கூறினார்.
அன்னா இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால், இரவில் வேலை செய்யுங்கள், நாங்களும் இரவில் வேலை செய்கிறோம் என்று சொல்வார்கள். அன்னா தனது படுக்கை அறைக்கு வரும் போது மிகவும் சோர்வாக வருவார். சில நேரங்களில் உடைகளைக்கூட மாற்றாமல் அப்படியே படுக்கையில் படுத்துவிடுவார். தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை முடிக்க கடினமாக உழைத்தார்.
நாங்கள் வேலையை விடும்படி கேட்டுக்கொண்டோம். ஆனால் கற்றுக்கொள்ளவேண்டும் என்று கூறி தொடர்ந்து வேலை செய்தார்.
அவருக்கு அதிகப்படியான அழுத்தம் இருந்தது. இதனால் உடல் நிலை மோசமடைந்து இறந்துவிட்டார். இனியாவது விழித்துக்கொண்டு பணியாற்றும் கலாசாரத்தை மாற்றி, ஊழியர்களின் உடல் நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.