சிறுவனின் ரத்த மாதிரியை மாற்ற ரூ.3 லட்சம் லஞ்சம் - அம்பலமான மருத்துவர்கள் சதி!
கடந்த வாரம் நடந்த போர்ஷே கார் விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Porsche Car விபத்து
கடந்த வாரம் புனேவில் போர்ஷே காரை தொழிலதிபரின் மகன் ஒருவர் மதுபோதையில் அதிவேகமாக இயக்கி உள்ளான். அப்போது சாலையில் சென்ற பைக் மீது மோதி பெரும் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் பைக்கில் பயணித்த தம்பதி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் பெரும் சர்ச்சையாகியுள்ளது. இதன் காரணமாக சிறுவன் கைது செய்யப்பட்டான். முதலில் சிறுவனுக்கு ஜாமீன் வழங்கப்பட்ட போதிலும், அது சில நாட்களில் ரத்து செய்யப்பட்டது. தொழிலதிபரின் மகன் ஆகிய அவரை காப்பாற்ற பல முயற்சிகள் எடுக்கப்பட்டது.
ஏற்கனவே விபத்தை ஏற்படுத்திய சிறுவனைக் காப்பாற்ற டிரைவரை சரணடைய வைக்கச் சிறுவனின் குடும்பத்தினர் முயன்றுள்ளனர். டிரைவரிடம் சிறுவனின் குடும்பத்தினர் பெரும் தொகையைப் பணமாகத் தருவதாகவும் கூறியுள்ளனர். இது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.
மருத்துவர்கள் சதி
அதில், 17 வயது சிறுவன் குடிபோதையில் இருந்ததை உறுதி செய்ய போலீசார் அவனிடம் ரத்தப் பரிசோதனையை மேற்கொண்டுள்ளனர். இதற்கிடையே சிறுவனைக் காப்பாற்ற அந்த இரத்த பரிசோதனை முடிவுகளை மாற்ற முயற்சி நடந்துள்ளது. இந்த விவகாரத்தில் தான் இரண்டு மருத்துவர்களை இப்போது புனே போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில், அங்கு சிறுவனின் ரத்த மாதிரியை டாக்டர்கள் அஜய் மற்றும் ஹரி ஆகியோர் மாற்றி மோசடி செய்தது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது. தடயவியல் பிரிவு தலைவரான டாக்டர் அஜய் சொல்லி டாக்டர் ஹரி சிறுவனின் ரத்த மாதிரியை எடுத்து குப்பை தொட்டியில் போட்டுவிட்டு,
வேறு ஒருவரின் ரத்த மாதிரியை எடுத்து அதனை சோதனை செய்து அறிக்கையாக அனுப்பினார். இதில் சிறுவனின் தந்தை அகர்வால், டாக்டர் அஜய்யிடம் போனில் பேசி லஞ்சம் தருவதாகச் சொல்லி இக்காரியத்தில் ஈடுபட வைத்துள்ளார். போலீஸாரின் விசாரணையில் ரத்த மாதிரி எடுக்கப்பட்ட சசூன் மருத்துவமனையில் பியூனாக பணியாற்றிய
அதுல் என்பவரைத்தான் டாக்டர்கள் இருவரும் பில்டர் அகர்வாலிடம் சென்று லஞ்ச பணத்தை வாங்கி வரும்படி தெரிவித்துள்ளனர். அதுல், பில்டர் அகர்வாலிடம் சென்று ரூபாய் 3 லட்சத்தை வாங்கி வந்துள்ளார்.இதற்கிடையே இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பப் உரிமையாளர் உட்பட 4 பேர் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.