செல்போனால் வந்த சண்டை - பரிதாபமாக உயிரிழந்த அண்ணன் தங்கை
செல்போனால் வந்த சண்டையால் அண்ணன் தங்கை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
செல்போனால் சண்டை
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை பகுதியை சேர்ந்த தம்பதி சித்திரகுமார் - ஜீவிதா தம்பதிக்கு மணிகண்டன்(18) என்ற மகனும், பவித்ரா(16) என்ற மகளும் உள்ளனர். பவித்ரா அங்குள்ள அரசு பள்ளி ஒன்றில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் பவித்ரா நேற்று முன்தினம்(16.02.2025) இரவு 11 மணி வரை செல்போனை பயன்படுத்தியுள்ளார். இதனால் அவரை பெற்றோர் கண்டித்திருக்கிறார்கள்.
கிணற்றில் மூழ்கி பலி
ஆனாலும் கேட்காமல் அவர் செல்போனை தொடர்ந்து பயன்படுத்தவே அவரது அண்ணன் மணிகண்டன் செல்போனை பிடிங்கி கீழே போட்டு உடைத்து விட்டு தூங்க செல்லுமாறு கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த பவித்ரா தற்கொலை செய்துகொள்ளப் போவதாக கூறிக்கொண்டே அருகே உள்ள கிணற்றில் குதித்துள்ளார்.
அவரை காப்பாற்றுவதற்காக மணிகண்டனும் அந்த கிணற்றில் குதித்துள்ளார். இதில் 2 பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தீயணைப்புத்துறையினர் இருவரின் உடலையும் சடலமாக மீட்டனர்.
இதனையடுத்து, உயிரிழந்த இருவரின் சடலமும் திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, பின்னர் அவர்களது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. செல்போனால் ஒரே நேரத்தில் பெற்றோர் இரு பிள்ளைகளையும் இழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.