புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் யார் தெரியுமா? முழு விவரம் இதோ!
புதுக்கோட்டை மாவட்டம்
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்த இந்தியா முழுவதும் இருந்த 565 சமஸ்தானங்களில் புதுக்கோட்டை சமஸ்தானதிடமிருந்து மட்டும் வரி வசூல் செய்யப்படவில்லை. இந்தியா 1947 ஆம் ஆண்டே சுதந்திரம் பெற்றிருந்தாலும் புதுக்கோட்டை சமஸ்தானம் 1948 ஆம் ஆண்டுதான் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.
1974 ஆம் ஆண்டு திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களிலிருந்து பிரித்து புதுக்கோட்டைமாவட்டம் உருவாக்கப்பட்டது. தஞ்சாவூர், திருச்சி, சிவகங்கை, இராமநாதபுரம், வங்காள விரிகுடா ஆகியவை இதன் எல்லையாக உள்ளது. கந்தர்வக்கோட்டை, விராலிமலை, புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி மற்றும் அறந்தாங்கி ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 43 மாவட்ட ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் பெண் மாவட்ட ஆட்சியர்களே நியமிக்கப்பட்டுள்ளனர்.
அருணா ஐ.ஏ.எஸ்
அக்ரி படிப்பை முடித்துள்ள இவர் 2016 பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவார். முன்னதாக அச்சு மற்றும் எழுது பொருள் துறை இயக்குநராகவும், நீலகிரி மற்றும் சென்னை மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த இவர், 19.07.2024 அன்று முதல் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வருகிறார்.
இவரின் ஆட்சி காலத்தில், தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடி பனை விதைப்புத் திட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டம் இதுவரை 7.5 லட்சம் பனை விதைகள் விதைத்து முன்னிலையில் உள்ளது.
மெர்சி ரம்யா ஐ.ஏ.எஸ்
பொறியியல் படிப்பை முடித்துள்ள இவர் 2015 ஆம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவார். சிவில் சர்விசஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 32வது இடமும் தமிழக அளவில் 2 ஆம் இடமும் பெற்று தேர்ச்சி பெற்றார்.
ஈரோடு மாவட்டத்தில் உதவி ஆட்சியர், திண்டிவனம் சார் ஆட்சியர், கன்னியாகுமரி மாவட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி), வணிக வரித்துறையில் இணை ஆணையர் என பல்வேறு பதவிகளை வகித்து வந்த இவர், 22.05.2023 அன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.
கவிதா ராமு ஐ.ஏ.எஸ்
மதுரையில் பிறந்த இவர் 2013 ஆம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவார். 5 வயது முதலே பரதநாட்டியம் கற்க தொடங்கிய இவர், தனது 8 வயதில் மதுரையில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டில் பரத நாட்டியம் ஆடினார்.
சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்திற்கு சீன அதிபர் மற்றும் இந்தியா பிரதமர் மோடி வருகை தந்த போது, இவர் ஏற்பாடு செய்த பரதநாட்டிய நிகழ்ச்சிக்கு அவர்களின் பாராட்டை பெற்றார். இவரின் தந்தை ராமுவும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவார்.
வேலூரில் வருவாய் கோட்ட அலுவலர், திருவள்ளூர் மாவட்ட துணை ஆட்சியர், சென்னை சிவில் சப்ளைஸ் உதவி ஆணையர், நுகர்வோர் பாதுகாப்பு துறை இணை இயக்குநர், மாநில குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குநர், என பல்வேறு பதவிகளை வகித்து வந்த இவர், 17.06.2021 அன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில், நேரில் சென்று ஆய்வு நடத்திய இவரிடம், அங்கு வசித்து வந்த பட்டியலின மக்கள் தங்களை கோவிலுக்குள் பிற சாதியினர் அனுமதிப்பதில்லை என முறையிட்டனர். அதிரடியாக அந்த மக்களை கோவிலுக்குள் அழைத்து சென்று அனைவரின் பாராட்டையும் பெற்றார்.