கருப்பு அழகி சான் ரேச்சல் - உயிரைப் பறித்த உடல் பிரச்சினை?
சான் ரேச்சல் உடல்நலக் குறைவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சான் ரேச்சல் மறைவு
புதுச்சேரியைச் சேர்ந்தவர் சான் ரேச்சல் (25). இவர் நிறத்தைக் காட்டிப் போடப்பட்ட தடைக்கற்களை உடைத்து, படிப்படியாக மாடலிங் துறையில் உயர ஆரம்பித்தார்.
மிஸ் புதுச்சேரி 2021, மிஸ் பெஸ்ட் ஆட்டிடியூட் 2019, மிஸ் டார்க் குயின் தமிழ்நாடு 2019 என அழகு போட்டிகளில் விருதுகளை குவித்தார். லண்டன், ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று, டார்க் குயின் என்ற பட்டம் பெற்றார்.
பல்வேறு பட்டிமன்றங்களில் பங்கேற்று பெண்களுக்கான தன்னம்பிக்கை மற்றும் விழிப்புணர்வு குறித்து பேசியுள்ளார். இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு திருமணமாகி 100 அடி சாலையில் உள்ள ஜான்சி நகரில் தனியாக வசித்து வந்தார்.
தீவிர விசாரணை
இந்நிலையில் அவருக்கு சிறுநீரகம் சம்பந்தமான உடல்நலப் பிரச்சினை ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனால் கடந்த சில நாட்களாக மன அழுத்தம் ஏற்பட்டு, அதிகமாக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டுவிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனைக் கண்ட அவரது தந்தை காந்தி, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். 2 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த சான் ரேச்சல் திடீரென தலைமறைவாகியுள்ளார். பின் சில நாட்கள் கழித்து வீடு திரும்பிய ரேச்சலின் உடல்நிலை மிகவும் மோசமடைந்திருந்தது.
அவரை மீண்டும் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்போது போலீசார் வழக்குப் பதிவு செய்து சான் ரேச்சல் எதற்காகத் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என விசாரித்து வருகின்றனர்.