காதல் அதானே எல்லாம்..அல்ஜீரியா இஸ்லாமிய பெண்ணை கரம்பிடித்த புதுச்சேரி கிறிஸ்துவ இளைஞர்!
அல்ஜீரியா பெண்ணை, புதுச்சேரி இளைஞர் கரம்பிடித்துள்ள சம்பவம் கவனம் ஈர்த்துள்ளது.
மதம் கடந்த காதல்
புதுச்சேரியை சேர்ந்தவர் அபிலாஷ். இவர் நெதர்லாந்து நாட்டில் பணி செய்து வருகிறார். இவர், அதே இடத்தில் பணிபுரியும் அல்ஜீரியா நாட்டைச் சேர்ந்த பாத்திமா அப்பி என்ற இஸ்லாமிய பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
அபிலேஷின் தந்தை இந்து, தாய் கிறிஸ்துவர். காதலிக்கும் பெண் இஸ்மியர். இதனால் இருவீட்டாரின் சம்மதத்தை பெற்று வள்ளலார் உருவாக்கிய சன்மார்க்க நெறிப்படி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
வள்ளலார் முறைப்படி திருமணம்
தொடர்ந்து, இந்தியா வந்த இருவரும் சன்மார்க்க சங்கத்தினர் மற்றும் பெரியோர்கள் முன்னிலையில் புதுச்சேரி தட்டாஞ்சாவடி சமரச சத்திய சாதனை சங்கம் எனப்படும் வள்ளலார் அவையில் உலகப் பொதுமறை திருக்குறளின் மீதும் அருட்பெருஞ்சோதி வள்ளலாரின் திருமுறையின் மீதும் உறுதியேற்று திருமணம் செய்து கொண்டனர்.
இதில் கலந்துக்கொண்ட சன்மார்க்கிகள் திருவருட்பாவின் ஆறாம் திருமுறை பாடலை சுமார் இரண்டரை மணி நேரம் அகவல் பாராயணம் செய்து திருமணத்தை நடத்தி வைத்தனர். மேலும், சன்மார்க்க முறைப்படி மாங்கல்யத்துக்கு பதிலாக தங்கச் சங்கிலியை கழுத்தில் அணிந்து மாலை மாற்றி சடங்குகளை நடத்தினர்.