PT பீரியடை கடன் வாங்காம விளையாட விடனும் - கலெக்டரிடம் கோரிக்கை வைத்த மாணவன்!
பி.டி பீரியட்டை கடன் வாங்கி பாடமெடுக்கக் கூடாது என மாணவர் ஒருவர் பேசியது வைரலாகி வருகிறது.
கருத்துக் கேட்புக் கூட்டம்
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில், மாநிலக் கல்விக் கொள்கை தொடர்பான, மண்டல அளவிலான கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இதில், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர்,
கரூர் மாவட்டங்களை சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளி, தனியார் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், தன்னார்வலர்கள் கலந்துக் கொண்டு, தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். அதில் பேசிய அரசுப் பள்ளி மாணவர்,
விளையாட்டு முக்கியம்
"கல்விக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை விளையாட்டுக்கும் கொடுக்க வேண்டும். தயவுச் செய்து விளையாட்டு பாட நேரத்தை மற்ற பாட ஆசிரியர்களுக்கு கொடுக்க அனுமதிக்கக் கூடாது. விளையாட மட்டுமே அனுமதிக்க வேண்டும்" என்றார்.
அதேபோல், அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கழிப்பறைகள் சுகாதாரமான முறையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தற்போது தொடக்கப் பள்ளியில் வழங்கும் சிற்றுண்டி திட்டத்தை உயர்நிலைப் பள்ளிகளுக்கும் வழங்க வேண்டும் என்று மாணவிகள் சிலர் கோரிக்கை வைத்துள்ளனர்.
சிற்றுண்டி திட்டம்
மேலும், பெற்றோர் ஒருவர் "அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் தங்களது குழந்தைகளை கண்டிப்பாக அரசுப் பள்ளிகளில் தான் படிக்க வைக்க வேண்டும். இதை மட்டும் செய்தாலே, அரசுப் பள்ளிகளில் உள்ள அத்தனை பிரச்னைகளும் சரியாகி விடும்" என்றார்.
இதற்கு பதிலளித்த உயர்மட்டக் குழுவின் தலைவரான, ஓய்வுப் பெற்ற நீதிபதி முருகேசன், "அதற்கு அரசியலமைப்பு சட்டத்தில் இடம் இல்லை. அது அவர்களது சொந்த விருப்பம். எனவே அவர்களை கட்டாயப்படுத்த முடியாது" என தெரிவித்தார்.