ஃபெஞ்சல் புயல் பாதிப்பு..நிவாரணம் கிடைக்காமல் தவிக்கும் மக்கள் - EPS அட்டாக்!
டெல்டா மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
கனமழை
கடந்த இரண்டு நாட்களாக குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக பெய்துவரும் கனமழையால் டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன.
கனமழையின் காரணமாக அப்பகுதிகளில் ஓடும் ஆறுகள் மற்றும் சிற்றாறுகளில் தண்ணீர் அதிக அளவு சென்று கொண்டிருக்கிறது. ஆற்றின் கரைகள் பல இடங்களில் பலவீனமாக இருப்பதால் கரைகள் உடைந்து பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உள்ளது.
திருநெல்வேலி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இரு நாட்களாகப் பெய்த கனமழையால் குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் உள்ள நீரை கனரக மோட்டார்களை வைத்து வெளியேற்றவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்குமிடம், உணவு, மருத்துவ சிகிச்சைகளை வழங்கவும் வலியுறுத்துகிறேன்.
நிவாரணம்
கடந்த வாரம் ஃபெஞ்சல் புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், வெள்ள நீரால் பயிர்கள் மூழ்கி பாதிப்படைந்த விவசாயிகளுக்கும் உரிய நிவாரணத்தை வழங்குமாறு ஏற்கெனவே திமுக அரசை வலியுறுத்தி இருந்தேன். பல இடங்களில் நிவாரணங்கள் உண்மையாகவே பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடையவில்லை என்று,
பாதிக்கப்பட்ட மக்கள் ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபட்டுவருவதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. எனவே, அரசின் நிவாரணப் பொருட்கள் மற்றும் நிவாரணத் தொகை பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வழங்க ஸ்டாலினின் திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.