வாக்குரிமை கேட்டு பாஜகவினர் போராட்டம்; விரல்களில் அடையாள மை - நகைத்த நெட்டிசன்கள்!
வாக்குரிமை கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பலரது விரல்களில் வாக்களித்ததற்கான அடையாளமாக மை இருந்தது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாக்குரிமை போராட்டம்
நடப்பாண்டின் மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 7 கட்டங்களாக நடைபெறும் இந்த வாக்குபதிவின் முதற்கட்டம் தமிழகத்தில் நடந்து முடிந்தது. இந்த நிலையில், கோவை தொகுதியில், வாக்குப்பதிவின்போது பல வாக்காளர்கள் தங்களது பெயர்கள் நீக்கப்பட்டதால் தங்களால் வாக்களிக்க முடியவில்லை என்ற புகார் எழுந்தது.
குறிப்பாக கோவை கவுண்டம்பாளையம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட அங்கப்பா மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் 800க்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு இருப்பதாக பாஜகவினர் குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்த மாவட்ட நிர்வாகம், உயிரிழந்தவர்கள், முகவரி மாறியவர்கள் என 100க்கும் குறைவானவர்கள் மட்டுமே அந்த வாக்குச்சாவடி மையத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு பதிலாக 250க்கும் மேற்பட்டோர் புதிதாக அந்த வாக்குச்சாவடி மையத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
அடையாள மை
இதற்கிடையில், அண்ணாமலை வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் சில தன்னார்வலர்கள் இணைந்து ’பீப்பிள் ஃபார் அண்ணாமலை’ என்ற அமைப்பை தொடங்கினர். இதை சேர்ந்த பலரும் இன்று கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதில், கோவையில் லட்சக்கணக்கானோரின் வாக்குகள் நீக்கப்பட்டதாக கூறி கண்டன முழக்கங்களை எழுப்பினர். அப்போது, பாஜகவிற்கும் தங்களது அமைப்பிற்கும் தொடர்பில்லை எனவும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் தேர்தல் ஆணையத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியுள்ளனர்.
இருப்பினும், பாஜகவினர் போராட்டம் துவங்கும் போது ’பாரத் மாதா கி ஜே’ என்ற முழக்கத்துடன் துவங்கி, முடிக்கும் போதும் அதே முழக்கத்தை கூறி முடித்தனர். இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்ட பலரது விரல்களிலும் வாக்களித்ததற்கான அடையாளமாக கருப்பு மை வைக்கப்பட்டிருந்தது பளிச்சென தெரிந்தது.
இது குறித்து கேட்டபோது தங்களில் சிலருக்கு வாக்கில்லை எனவும், வாக்குகள் இல்லாதவர்களுக்காக இந்த போராட்டத்தை நடத்தி இருப்பதாகவும் அவர்கள் விளக்கம் அளித்து விட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.தெப்போது போராடியவர்களின் விரல்களில் இருந்த மையை சுட்டிக்காட்டி பலரும் நகைத்து வருகின்றனர்.