மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி அமல் - பின்னணி என்ன?
மணிப்பூரில் குடியரசு தலைவர் அமல்படுத்தப்பட்டுள்ளது.
மணிப்பூர் கலவரம்
வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 2023 ஆம் ஆண்டு முதலே மெய்தி - குக்கி ஆகிய இரு பிரிவு மக்கள் இடையே இனக் கலவரம் நடைபெற்று வருகிறது.
இனக்கலவரத்தால், நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், 60,000 க்கும் மேற்பட்ட மக்கள் வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்துள்ளனர்.
முதல்வர் ராஜினாமா
கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் அங்கு பாஜக ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், பிரேன் சிங் மணிப்பூர் முதல்வராக பதவி வகித்து வந்தார். பிரேன் சிங் வன்முறையை தூண்டும் வகையில் பேசிய ஆடியோவே கலவரத்திற்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த ஆடியோவின் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மத்திய தடயவியல் துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்திய பிரேன் சிங், 09.02.2025 அன்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதனையடுத்து, மறுநாள் தொடங்கவிருந்த பட்ஜெட் கூட்டத்தொடரை ஆளுநர் அஜய் பல்லா ரத்து செய்தார் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது மணிப்பூரில் எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ் பாஜக அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர உள்ளதாக அறிவித்திருந்தது.
குடியரசுத் தலைவர் ஆட்சி
இதனை தொடர்ந்து பாஜக சார்பில் புதிய முதல்வர் தேர்வு செய்யப்படுவாரா அல்லது குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வருமா என விவாதங்கள் எழுந்து வந்தன. இந்நிலையில் ஆளுநர் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்தார். அந்த பரிந்துரையை ஏற்று, மணிப்பூர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
மணிப்பூரில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுவது இது முதல்முறை அல்ல. நாட்டிலேயே அதிக முறையாக 11 முறை மணிப்பூரில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. கடைசியாக, ஜூன் 3, 2001 அன்று அமல்படுத்தப்பட்ட குடியரசுத்தலைவர் ஆட்சி 277 நாட்கள் நீடித்தது. 1969ஆம் ஆண்டு மணிப்பூரில் அமல்படுத்தப்பட்ட குடியரசுத்தலைவர் ஆட்சி 2 ஆண்டுகளுக்கு நீடித்தது.
குடியரசுத்தலைவர் ஆட்சியின் போது கொள்கை முடிவுகள் எதையும் அமல்படுத்த முடியாது. மாநிலத்தின் அரசியல் அமைப்பு தலைவராக ஆளுநராக இருப்பார். குடியரசுத்தலைவர் ஆட்சியை 3 ஆண்டுகள் வரை நீட்டிக்கவும் சட்டத்தில் இடமுள்ளது. குடியரசுத்தலைவர் ஆட்சியை எப்போது வேண்டுமானாலும் விலக்கி கொள்ள முடியும். அதற்கு பாராளுமன்ற ஒப்புதல் எதுவும் தேவையில்லை.