அநாகரீகமான அரசியல்; கிழியாத சட்டையை கிழித்துவிட்டு விளம்பரம் தேடிய ஸ்டாலின் - பிரேமலதா !
அதிமுக நடத்தும் உண்ணாவிரத போராட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் ஆதரவு தெரிவித்தார்.
பிரேமலதா
அப்போது செய்தியாளர்களளிடம் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசினார். அதில், “கள்ளச்சாராயம் குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டாமா?.. சட்டமன்றத்தில் பேச ஏன் தடுக்கிறீர்கள்..? நாடாளுமன்றத்தில் ஒரு நீதி... சட்டமன்றத்தில் ஒரு நீதியா..?
நாளை ஆளுநரை சந்தித்து தேமுதிக சார்பில் மனு அளிக்க உள்ளோம். கள்ளச்சாராய சம்பவத்திற்கு பொறுப்பேற்று அமைச்சர் முத்துசாமி ராஜினாமா செய்ய வேண்டும். கள்ளக்குறிச்சி இறப்புகள் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும். கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரத்தில் அதிமுகவுக்கு விளம்பரம் தேட அவசியம் இல்லை.
சட்டையை கிழித்த ஸ்டாலின்
கிழியாத சட்டையை கிழித்து கொண்டு பத்திரிக்கையாளர்களிடம் ஓடி விளம்பரம் தேடியது ஸ்டாலின் அவர்கள்தான். கள்ளக்குறிச்சி சம்பவம் திமுகவினர் உதவியுடன் நடப்பதாக கூறுகிறார்கள். சிபிஐ விசாரணையில்தான் உண்மை நிலை தெரியும், அப்போதுதான் அவர்கள் முகத்திரை கிழியும்..விக்கிரவாண்டி இடைத்தேர்தலை நாங்கள் புறக்கணித்துள்ளோம்.
ஈரோடு கிழக்கில் அநாகரீகமான அரசியலை திமுக முன்னெடுத்ததால், எதிர்ப்பை தெரிவிக்க புறக்கணித்துள்ளோம். சீமான் எங்கள் ஆதரவை கோரியுள்ளார், அவருக்கு வாழ்த்துக்கள். கடந்த முறை சபாநாயகர் இருக்கையிலேயே திமுகவினர் அமர்ந்தனர். அதை விட அவை மீறல் வேறு எதுவும் இல்லை. இந்தப் போராட்டம் இதோடு நின்றுவிடாது.
அதிமுகவும், தேமுதிகவும் தொடர்ந்து போராடி வருகிறோம்.. அடுத்த தலைமுறையை பற்றி யோசிக்காமல், தேர்தலை பற்றி மட்டுமே திமுக அரசு யோசிக்கிறது. 2026ல் அதிமுக தலைமையில் மிகப்பெரிய கூட்டணியுடன் ஆட்சி அமைப்போம்” என்றார்.