இடைத்தேர்தலில் ஆதரவு கேட்ட சீமான் - பதிலளித்த பிரேமலதா விஜயகாந்த்
அதிமுகவின் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டார் தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்
விக்கிரவாண்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி மரணமடைந்ததையடுத்து விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்தத்தேர்தலில், திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் சார்பில் மருத்துவர் அபிநயா பொன்னிவளவன், பாமக சார்பில் சி.அன்புமணி போட்டியிடுகின்றனர். தேர்தல் நியாயமாக நடைபெறும் என நம்பிக்கை இல்லை எனக்கூறி அதிமுக மற்றும் தேமுதிக இந்த இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
சீமான்
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்த இடைத்தேர்தலை புறக்கணிக்கும் முடிவை எடுத்துள்ள அதிமுக மற்றும் தேமுதிக கட்சிகள் எங்களை ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் இன்று சென்னையில் அதிமுக சார்பில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்ற தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்திடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அவர், வெளிப்படடையாக ஆதரவு கேட்ட அவர்களுக்கு எங்களது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம். ஆனால் இந்த இடைத்தேர்தலை தேமுதிக புறக்கணிக்கிறது என்ற முடிவை தெளிவாக சிந்தித்து தான் அறிவித்துள்ளோம். இதுவரை நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட்டது தேமுதிக. இந்த தேர்தலில் யாருக்கும் எந்த பயனும் இல்லை, எதிர்ப்பை தெரிவிக்கவே இந்த புறக்கணிப்பு முடிவை எடுத்துளோம் என கூறினார்.