2026 தேர்தலில் விஜய் உடன் கூட்டணியா? பிரேமலதா விஜயகாந்த் பதில்
திமுக ஆட்சி வாடகைக்கு வாங்கும் ஆட்சியாகதான் பார்க்கிறேன் என பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார்.
தேமுதிக கூட்டம்
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பிரேமலதா விஜயகாந்த்
தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்திற்கு ஆண்டு தோறும் அஞ்சலி செலுத்துவது, பூரண மதுவிலக்கு, சொத்து வரி உயர்வு, மின்சாரக் கட்டண உயர்வை திரும்பப் பெறுதல், தேர்தலுக்காக 234 தொகுதிகளிலும் சட்டமன்றப் பொறுப்பாளர்கள் நியமிப்பது, கேரளாவுக்கு கனிம வளம் கடத்தப்படுவதைத் தடுத்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மேலும், தேர்தல் கூட்டணி, தேர்தல் பணிகள் ஆகியவை குறித்து மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கபட்டுள்ளது. இதன் பின் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், திமுக கூட்டணியில் பல குளறுபடிகள் உள்ளன. இது 2026 ஆம் ஆண்டு வரை தொடருமா என்ற கேள்வியும் உள்ளது. திமுகவின் கூட்டணி ஆட்சியில் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
கூட்டணி
திமுக ஆட்சி வாடகைக்கு வாங்கும் ஆட்சியாகதான் பார்க்கிறேன். மழை வந்தால் போட், பேருந்து என அனைத்தையும் வாடகைக்கு எடுக்கும் ஆட்சியாக உள்ளது. வரும் டிசம்பர் மாதம் பெரு மழை உள்ளது போட் வாடகை எடுத்தால் பத்தாது. எவ்வளவு மழை வந்தாலும் சமாளிப்போம் என்று உதயநிதி ஸ்டாலின் சொல்லி உள்ளார். இது சினிமாவில் பேசும் டயலாக் கிடையாது.
விஜய பிரபாகரனுக்கு கட்சிப் பொறுப்பு வழங்க வேண்டும் என்பது தொடர்ந்து நிர்வாகிகள் கோரிக்கை வைக்கிறார்கள். செயற்குழு பொதுக்குழு கூட்டத்தில் விஜய் பிரபாகரன் உட்பட பல முக்கிய நிர்வாகிகளுக்கு பதவிகளை அறிவிக்க உள்ளோம்.
அதிமுகவுடன் நட்புணர்வின் அடிப்படையில் எங்கள் கூட்டணி தொடர்கிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் எங்கள் கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெரும். அதற்கான வியூகம் கூட்டணி என்பதை அந்தந்த கால கட்டங்களில் அமைத்து அறிவிப்போம். விஜய் கட்சியின் கூட்டணி நிலைப்பாடு குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.