கலாச்சாரத்தை மீறி... அம்மாவாக கேட்டுக்கொள்கிறேன் - வேண்டுகோள் வைத்த பிரேமலதா!
பெண்களுக்கு, பிரேமலதா விஜயகாந்த் சில பணிவான கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
பிரேமலதா விஜயகாந்த்
தாம்பரத்தில், செங்கல்பட்டு மாவட்ட தேமுதிக சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. அதில் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், “கடவுள் நமக்கு கொடுத்த இந்த பெண்மை மிகவும் போற்றத்தக்கது. ஆனால் ஆண்களுக்கு நிகராக எங்களுக்கும் சம திறமை இருக்கின்றது என்று நீங்கள் உங்கள் திறமையை கல்வியில் காட்ட வேண்டும்.
தலைகுனிகிறேன்
வேலையில் காட்ட வேண்டும், வருமானத்தில் காட்ட வேண்டும் உங்கள் குடும்பத்தை பாதுகாப்பதில் காட்ட வேண்டும். உங்கள் கலாச்சாரத்தை காப்பாற்றுவதில் காட்ட வேண்டும். அதை விடுத்து ஆண்கள் புகை பிடித்தால் நாங்களும் புகைப்போம் எனக் கூறி புகைப் பிடித்தல்,
கஞ்சா போடுதல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இன்று அதிகமாக கஞ்சா புகைப்பது பெண்கள் என்ற புள்ளி விவரம் வருகையில் உண்மையாகவே வெட்கித் தலைகுனிகிறேன். எல்லா இடத்திலும் கஞ்சா அதிகளவில் புகைப்பிடிப்பது இன்று பெண் பிள்ளைகளாக இருக்கின்றனர்.
ஆண்கள் கூட அந்த அளவிற்கு இல்லை. தயவு செய்து கலாச்சாரத்தை மீறி உங்களை நீங்கள் அழித்துக் கொள்ளக்கூடாது என உங்கள் அன்னையாக கேட்டுக்கொள்கிறேன்” என வேண்டுகோள் விடுத்தார்.