தரையில் அமர்ந்து குழந்தை பெற்ற பெண் - கிண்டல் செய்த நர்சுகள்!
பெண் தரையிலேயே குழந்தையை பிரசவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்ணுக்கு பிரசவம்
உத்தரகாண்ட், ஹரித்வாரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கர்ப்பிணிப் பெண் ஒருவர் உறவினருடன் பிரசவத்திற்காக காலை நேரத்தில் சென்றுள்ளார்.
ஆனால், அவருக்கு படுக்கை வசதி கூட கொடுக்கப்படவில்லை. இரவு 9.30 மணியளவில் அந்தப் பெண்ணுக்கு பிரசவ வலி அதிகரித்துள்ளது. அவருடன் உறவினப் பெண் ஒருவர் மட்டுமே இருந்துள்ளார். இந்நிலையில் அவர் ஏழை என்பதால், பணியில் இருந்த மருத்துவர், பிரசவம் பார்க்க முடியாது என மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் வலியில் நகர முடியாமல் மருத்துவமனையின் தரையிலேயே அமர்ந்துவிட்டார். பின், அந்தப் பெண் பொதுமக்கள் வந்து செல்லும் பகுதியிலேயே குழந்தையைப் பிரசவித்துள்ளார்.
மருத்துவமனை செயல்
இதனை அங்கிருந்த நர்சுகள் நக்கலாகப் பேசி கேலி செய்ததாக பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்ப உறுப்பினர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
இதனையடுத்து புகார் எழுந்த நிலையில், இரவுப் பணியில் இருந்த ஒப்பந்த மருத்துவர் சோனாலி உடனடியாகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இரண்டு செவிலியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஆனால், அவசர சிகிச்சை பிரிவிலேயே பெண்ணுக்கு பிரசவம் நடைபெற்றதாக தலைமை மருத்துவர் ஆர்.கே. சிங் தெரிவித்துள்ளார். இருப்பினும், கர்ப்பிணிப் பெண்ணுக்கு அவசர நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டது ஏன் என்று விரிவான விசாரணை நடந்து வருவதாகவும்,
அலட்சியம் நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். தற்போது தாயும், குழந்தையும் நலமாக உள்ளனர்.