பாலியல் வன்கொடுமை..சிறுமி கர்ப்பம் - திருமணம் செய்து வைப்பதாக தீ வைத்த கொடூரம்!
கர்ப்பமான சிறுமியை திருமணம் செய்து வைப்பதாக கூறி தீ வைத்து எரித்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
உத்தரப்பிரதேசம், மெயின்புரியின் குராவலி பகுதியில், மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அதை யாரிடமும் தெரிவிக்காமல் இருந்திருக்கிறார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் சிறுமி வயிற்றுவலியால் அவதிப்பட்டிருக்கிறார்.

அவரை குடும்பத்தார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்ததில் அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து, சிறுமியிடம் விசாரித்ததில் அதே கிராமத்தை சேர்ந்த அபிஷேக் என்ற இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளார்.
சிறுமி கர்ப்பம்
அதையடுத்து, சிறுமியின் பெற்றோர், ஊர் பஞ்சாயத்தின் முன்னால் அபிஷேக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களிடம் பேசியுள்ளனர். அதில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் அபிஷேக்-கும் திருமணம் செய்துவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இளைஞரின் தாயார் பாதிக்கப்பட்ட பெண்ணை, திருமணம் செய்து வைப்பதாகக் கூறி வீட்டுக்கு அழைத்து, கர்ப்பிணிச் சிறுமி மீது பெட்ரோலைத் தெளித்து தீ வைத்திருக்கிறார். இதனால், அலறிய சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதன் அடிப்படையில், போலீஸில் புகார் அளித்ததில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை தேடி வருவதாகவும், விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.