நடிகர் விஜய்க்கு அரசியல் ஆலோசகர் ஆவாரா பிரசாந்த் கிஷோர்? - அவரே அளித்த பதில் இதுதான்!
விஜய் விரும்பி கேட்டாலும் அவருக்கு முழு நேர அரசியல் ஆலோசகராக மாட்டேன் என்று பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம்
நடிகர் விஜய் அரசியலில் கால்பதிக்கவுள்ளார் என்ற தகவல்கள் கடந்த சில மாதங்களாக வலம் வந்த வண்ணம் இருந்தது. அதனை உண்மையாகும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தனது கட்சி பெயரையும் அறிவித்தார் நடிகர் விஜய்.
அதன்படி கட்சிக்கு 'தமிழக வெற்றிக் கழகம்' என பெயரிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் "வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கும் போட்டியில்லை, யாருக்கும் ஆதரவில்லை. அதே நேரத்தில் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலைக் குறிவைத்து தனது கட்சி செயல்படும் என்று விஜய் அறிவித்தார்.
பிரசாந்த் கிஷோர் பதில்
தனது 69-வது படத்திற்கு பிறகு இனி திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்றும் தெரிவித்தார். மேலும், தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரை விரைவில் நடிகர் விஜய்,சந்திக்க உள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து பேசிய பிரசாந்த் கிஷோர், "விஜய் என்னை இதுவரை அணுகவில்லை.
ஆனால் அவர் உதவி கேட்டால் செய்வேன். என்னை மதித்து வருபவர்களுக்கு என்னால் முடிந்த அட்வைஸ் கொடுப்பேன். ஆனால் விஜய் விரும்பி கேட்டாலும் அவருக்கு முழு நேர அரசியல் ஆலோசகராக மாட்டேன்" என்று தெரிவித்துள்ளார்.