சினிமாவில் பவர் குரூப்; நடிகர் சங்கத்தினர் முதுகெலும்பு இல்லாதவர்கள் - நடிகை பத்மபிரியா தாக்கு!
மலையாள நடிகர் சங்கத்தினர் முதுகெலும்பு இல்லாதவர்கள் என நடிகை பத்மபிரியா பேசியுள்ளார்.
நடிகை பத்மபிரியா
மலையாள திரையுலகில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதை தொடர்ந்து ஏராளமான பாலியல் தொல்லை விவகாரம் வெளியான வன்னமே உள்ளது. பல்வேறு நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்களை வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழில் தவமாய் தவமிகுந்து, மிருகம், பொக்கிஷம், இரும்புக்கோட்டை, முரட்டு சிங்கம் உள்பட ஏராளமான படங்களில் நடித்து இருப்பவர் நடிகை பத்மபிரியா. மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
கடந்த 2017-ம் ஆண்டில் கொச்சியில் பிரபல மலையாள நடிகைக்கு பாலியல் தொல்லை நடந்த சம்பவத்திற்கு பிறகு அமைக்கப்பட்ட சினிமா பெண்கள் கூட்டு அமைப்பை உருவாக்குவதற்கு இவரும் ஒரு காரணமாக இருந்தார்.
இந்த சூழலில், நடிகை பத்மபிரியா ஒரு மலையாள தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- கடந்த 4½ வருடங்களுக்கு மேலாக அந்த அறிக்கையை மறைத்து வைத்தது ஏன்? யாருக்காக வெளியிடாமல் மவுனம் காக்கப்பட்டது என்பது குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.
நடிகர் சங்கத்தினர்
பாலியல் விவகாரத்தில் நிர்வாகிகள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்த மலையாள நடிகர்கள் சங்கத்திற்கு தலையும், முதுகெலும்பும் கிடையாது. அனைவரும் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டு உள்ளனர். மலையாள சினிமாவில் பவர் குரூப் இருக்கிறது.
யார் மறுத்தாலும் அதுதான் உண்மை. தங்கள் கைகளில் அதிகாரம் இருப்பதால்தான் அவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதுதொடர்பாக யாரும் வாயைத் திறக்க மறுக்கின்றனர்.
தற்போது ஏற்பட்டுள்ள விவகாரத்தை ஒரு பாலியல் பிரச்சனையாக மட்டுமே சினிமா துறையினர், பொதுமக்கள் பார்க்கின்றனர். அவர்களுக்கு நடிகைகள் அனைவரும் ஒரு சரக்கு மட்டுமே.
எனக்கு மலையாளத்தில் வாய்ப்புகள் திடீரென குறைந்து விட்டது. அதற்கு என்ன காரணம் என்று எனக்கு நன்றாகவே தெரியும். எனக்கு 26 வயது இருக்கும்போது வயதாகி விட்டதே, நடிப்பதை நிறுத்தக் கூடாதா? என்று ஒரு தயாரிப்பு நிர்வாகி கேட்டது எனக்கு பெரும் அதிர்ச்சியை தந்தது. என்று தெரிவித்துள்ளார்.