மின்வெட்டு ஏற்படும் அபாயம் வங்கி கணக்குகள் முடக்கம் - தவிக்கும் மெட்ராஸ் பல்கலை. மாணவர்கள்..!
தமிழ்நாட்டின் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றான மெட்ராஸ் பல்கலைக்கழகம் பெரும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றது.
நிதி நெருக்கடி
166 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட மெட்ராஸ் பல்கலைக்கழகம் இந்திய நாட்டிற்காக ஆறு முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் இரண்டு நோபல் பரிசு பெற்றவர்களை உருவாகியுளள்ளது. ஆனால், இன்று நிதி நெருக்கடியில் உள்ளது.
ஒரு நிறுவனம் அதன் வருவாயில் 51%க்கு மேல் மாநில அல்லது மத்திய அரசிடமிருந்து மானியமாகப் பெற்றால், அது அரசு நிறுவனமாக வகைப்படுத்தப்பட்டு வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று விதிமுறைகள் கூறுகின்றன. ஆனால், பல தணிக்கை ஆட்சேபனைகள் காரணமாக, 2017 முதல், தமிழக அரசிடம் இருந்து ,மெட்ராஸ் பல்கலைக்கழகம் மானியம் பெறவில்லை.
இதனால், வருமானவரி துறை பல்கலைக்கழகத்தை தனியார் நிறுவனமாகக் கருதி, 2017-18 முதல் 2020-21 வரை ₹424 கோடியை வரியாக விதித்தது. இதனை தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் 37 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டது.
வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதால், கடந்த சில நாட்களாக பல்கலைக்கழகம் வழங்கிய காசோலைகள் பவுன்ஸ் ஆகின்றதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மெட்ராஸ் பல்கலைக்கழகம் மற்றுமொரு பிரச்சனையை சந்திக்க இருக்கின்றது.
மின் கட்டணம்
₹80 லட்சம் மின்கட்டணத்தைச் செலுத்தத் தவறினால், சென்னைப் பல்கலைக்கழகம் முழுவதுமாக மின்சாரம் தடைப்படும் அபாயம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
பல்கலைக்கழகத்தின் நிதி நெருக்கடி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை பாதிக்கிறது மட்டுமல்லாமல் மாணவர்களையும் பாதிக்கிறது, ஏனெனில் பெல்லோஷிப் மற்றும் உதவித்தொகை நிலுவைத் தொகையை செலுத்த முடியாது.
சம்பளம் ₹7 கோடி, ஓய்வூதியம் ₹8 கோடி உட்பட தொடர் செலவுகளுக்கு மாதம் குறைந்தபட்சம் ₹18 கோடி தேவைப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளன.
பாரத ஸ்டேட் வங்கி, சேப்பாக்கம் கிளையில் 37 நிரந்தர வைப்பு மற்றும் வங்கிக் கணக்குகளை முடக்கியதுடன், தமிழ்நாடு மின் நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் கார்பஸ் ஃபண்ட், எண்டோவ்மென்ட் ஃபண்ட் போன்ற நிதிகளையும் வருமானவரி துறை நிறுத்தி வைத்துள்ளது.