கர்நாடகா முதல்வருடன் கைகோர்த்த ஸ்டாலின் அணை பற்றி பேசாதது ஏன்? - பொன்.ராதாகிருஷ்ணன் காட்டம்!
முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து பேசியுள்ளார்.
முதலமைச்சர்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்பொழுது பாஜக கட்சிக்கு எதிராக பெங்களூரில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு சென்றுள்ளார். இந்த சமயத்தில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்து முதல்வர் குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர், "தமிழக விவசாயிகள் காவிரி நீரை எதிர்நோக்கி இருக்கிறார்கள். ஆனால் தற்போது கிடைக்கும் நீரை கூட முழுமையாக தடுக்க புதிய அணையை மேகதாதுவில் கட்ட கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது" என்று கூறினார்.
காட்டம்
இதனை தொடர்ந்து அவர், "இச்சமயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கர்நாடக மாநிலம் சென்று, அணை கட்ட முயற்சி எடுக்கும் அம்மாநில முதல்-மந்திரி சித்தராமையா மற்றும் அதற்கு மூளையாக இருக்கும் துணை முதல்-மந்திரி டி.கே.சிவகுமார் ஆகியோருடன் கை குலுக்கி கொண்டு, சோனியா காந்தி கொடுக்கும் விருந்தில் கலந்துகொள்ள சென்றுள்ளார்.
இதுவெந்துபோன விவசாயி இதயத்தில் ஈட்டி பாய்ச்சுவது போல இருக்கிறது. எனவே தமிழக மக்களின் விருப்பத்துக்கு மாறாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கர்நாடகா சென்றது கண்டிக்கத்தக்கது. இதை எதிர்கட்சி கூட்டணிக்காக சென்றாக கருதவில்லை. விவசாயிகளின் கழுத்தை நெரிக்கின்ற கைகோர்ப்பு என்று நான் கருதுகிறேன். இது தமிழகத்துக்கான கேடு. தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் அங்கு சென்று இருக்கலாம்.
ஆனால் 8 கோடி மக்களின் முதலமைச்சராக சென்று கைகுலுக்கி இருப்பதை ஏற்றுக்கொள்ள மாட்டோம். மேகதாதுவில் அணைகட்ட மாட்டோம் என்ற வாக்குறுதியை தந்தால் மட்டுமே கூட்டணியில் கைகோர்ப்போம் என்று மு.க.ஸ்டாலின் மற்றும் கே.எஸ்.அழகிரி கூறி இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் வாக்குறுதியை பெறவில்லை. அதனால் தான் இன்றைய தினத்தை துக்க தினமாக அனுசரித்து கருப்பு பட்டை அணிந்து இருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.