டான்ஸ் ஆடிய மின்மினிப் பூச்சிகள்.. இயற்கை அழகை தத்ரூபமாக படம் பிடித்த புகைப்பட கலைஞர்!
புகைப்பட கலைஞர் ஒருவர் மின்மினிப் பூச்சிகளின் நடனத்தை படம்பிடித்தற்கு சர்வதேச விருது பெற்றுள்ளார்.
புகைப்பட கலைஞர்
பொள்ளாச்சியில் உள்ள அன்சாரி வீதியை சேர்ந்தவர் ஸ்ரீராம் முரளி (38). இவர், காட்டுயிர் ஒளிப்பட கலையில் அதிக ஆர்வம் கொண்டு, வனப்பகுதிகளுக்கு சென்று வன விலங்குகள் உள்ளிட்ட அங்கு வாழும் உயிரினங்களை இயற்கையாக படம் பிடித்து வந்துள்ளார்.
இவர் கடந்த 2022 ஏப்ரல் மாதம் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட உலாந்தி வனப்பகுதியில், அந்த புலிகள் காப்பகத்தின் கள இயக்குநர் ராம சுப்ரமணியன், வனத்துறையினர் மற்றும் காட்டுயிர் புகைப்பட கலைஞர் ஸ்ரீராம் முரளி ஆகியோர் மின்மினி பூச்சிகளின் பெரிய கூட்டத்தின் ஒத்திசைவு ஒளிர்வை கண்டனர்.
இந்த அதிசய நிகழ்வை படம்பிடித்தார் ஸ்ரீராம் முரளி.
சர்வதேச விருது
இந்நிலையில், லண்டன் இயற்கை வரலாறு அருங்காட்சியகம் சார்பில் ஒவ்வோர் ஆண்டும் வன விலங்குகள், கடல்வாழ் உயிரினங்கள், பறவைகள் உள்ளிட்ட 16 வகையான பிரிவுகளில் சிறந்த புகைப்பட கலைஞருக்கான விருது அளிக்கப்பட்டு வருகிறது. இதில் முதுகெலும்பில்லா உயிரினங்களை படம் பிடித்த பொள்ளாச்சியை சேர்ந்த ஸ்ரீராம் முரளிக்கு சிறந்த புகைப்பட கலைஞர் விருது வழங்கப்பட்டது.
இது குறித்து ஸ்ரீராம், "நாடு முழுவதும் காட்டுயிர் ஒளிப்படக் கலையில் பலரும் சாதனை படைத்து வருகின்றனர். தமிழகத்தைச் சேர்ந்த தனக்கு இந்த விருது கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.
ஆனைமலை வனப்பகுதியில் லட்சக் கணக்கான மின்மினி பூச்சிகள் மரத்தின் மீது அமர்ந்து கொண்டு, பெண் மின்மினி பூச்சிகளை கவர்வதற்காக ஒளி வெளிச்சம் போட்டு ஒத்திசைவான நிகழ்வை நிகழ்த்தியுள்ளது.
உலகம் முழுவதும் இதுபோன்ற ஒத்திசைவுகள் நடந்தாலும், பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் நடந்த இந்த நிகழ்வு இயற்கை அன்னை கொடுத்த தனித்துவம்" என்று கூறியுள்ளார்.