தவெக தலைவர் விஜய்யுடன் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு - பின்னணி என்ன?
தவெக தலைவர் விஜய்யை பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சந்தித்து பேசியுள்ளார்.
தமிழக வெற்றி கழகம்
2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு களமிறங்கியுள்ள தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு காலமே உள்ள நிலையில் அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்.
சமீபத்தில் மாவட்ட செயலாளர் மற்றும் மாநில அளவிலான நிர்வாகிகளை நியமித்து அறிவிப்பு வெளியிட்டார். ஜான் ஆரோக்கியசாமி தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் வியூக பணிகளை கவனித்து வருகிறார்.
பிரசாந்த் கிஷோர்
இதனிடையே புதிதாக கட்சியில் இணைந்த ஆதவ் அர்ஜுனாவிற்கு தேர்தல் மேலாண்மை பிரிவு செயலாளர் பதவி வழங்கப்பட்டது. ஆதவ் அர்ஜுனாவிற்கு ஏற்கனவே திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு தேர்தல் வியூகம் வகுத்த குழுவில் பணியாற்றிய அனுபவம் உண்டு. இவர் தனியாக வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் என்ற தேர்தல் வியூகம் வகுக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இந்தியாவின் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர், விஜய்யை அவரது சென்னை நீலாங்கரை இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார். ஆதவ் அர்ஜுனாவின் ஏற்பாட்டில் நடந்துள்ள சந்திப்பின் போது, ஜான் ஆரோக்கியசாமி, ஆனந்த் ஆகியோர் உடன் இருந்துள்ளனர்.
தேர்தல் வியூகம்
பாஜக, காங்கிரஸ், திமுக உட்பட பல்வேறு கட்சிகளுக்கு பிரசாந்த் கிஷோர் தனது ஐபேக் நிறுவனம் மூலம் தேர்தல் வியூகம் பணிகளை செய்துள்ளார். 2021 ஆம் ஆண்டுக்கு பிறகு எந்த கட்சிகளுக்கும் அவர் தேர்தல் வியூகம் வழங்கவில்லை. பிரசாந்த் கிஷோர் தற்போது ஜன் சுராஜ் என்ற அரசியல் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார்.
பிரசாந்த் கிஷோர் தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணி தொடர்பான வியூகங்களை அமைத்து கொடுப்பார் என கூறப்படுகிறது. இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்கும் வகையில் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு விஜய்யை கொண்டு வர எடப்பாடி பழனிசாமி காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி என தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.
தவெக தலைவர் விஜய் மார்ச் முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்க உள்ளதாகவும், அதற்கான தரவுகள் மற்றும் திட்டமிடல்களை ஆதவ் அர்ஜுனா மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. தற்போது விஜய்யுடனான பிரசாந்த் கிஷோரின் இந்த சந்திப்பிற்கு பின்னர் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பணிகள் வேகம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.