தமிழ் புத்தாண்டு திருநாள் - அரசியல் தலைவர்கள், ஆளுநர் வாழ்த்து
சித்திரை மாதத்தின் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது.
நாளை(ஏப்ரல் 14) தமிழ் புத்தாண்டு பிறப்பதால் அரசியல் தலைவர்கள் தமிழ் புத்தாண்டுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி
எனதருமை தமிழ்க் குடிமக்கள் சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு தினமாக பன்னெடுங் காலமாய்க் கொண்டாடி மகிழ்கின்றார்கள். புதிய தமிழ் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு தமிழரின் உள்ளத்திலும் புதிய சிந்தனைகள், புதிய முயற்சிகள், புதிய நம்பிக்கைகளோடு கூடிய புதிய உத்வேகம் பிறக்கட்டும்!
புதிய சாதனைகளைப் படைத்து புதிய வெற்றிகளைப் பெற்று; வழி மறிக்கும் தடைகளை எல்லாம் தகர்த்து, வளமான தமிழ் நாட்டைப் படைத்திடுவோம்' என, இப்புத்தாண்டில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து உறுதியேற்போம்.
பாமக நிறுவனர் ராமதாஸ்
சங்கக் காலத்தைப் போலவே நிகழ்காலத்திலும் தமிழர்கள் வாழ்க்கை திருவிழாக்கள், கொண்டாட்டங்கள் ஆகியவற்றால் நிறைக்கப்பட வேண்டும். அதற்கு வசதியாக தமிழர்களின் தொழில்கள் சிறக்க வேண்டும்.
அதன் மூலம் தமிழ் மக்களுக்கு அனைத்து வகையான நலங்களும், வளங்களும் கிடைக்க வேண்டும். அனைத்து மக்களின் வாழ்விலும் நெருக்கடிகள் மறைந்து மகிழ்ச்சி நிறைய வேண்டும் என வாழ்த்துகிறேன்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்
தமிழக மக்களை சூழ்ந்திருக்கும் இருள் விலகி அவர்களின் உள்ளத்திலும், எண்ணத்திலும் புதிய நம்பிக்கையையும், புத்துணர்வையும் விதைப்பதோடு, ஒட்டுமொத்த தமிழக மக்களும் விரும்பும் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய ஆண்டாகவும் இத்தமிழ்ப் புத்தாண்டு அமையட்டும்.
காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை
ஒன்றிய பாஜக அரசால் தமிழர்களின் உரிமைகளும், தன்மானமும் பறிக்கப்பட்டு வருவதை மீட்டெடுக்கவும், தமிழர்களின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் பாதுகாக்க வழி ஏற்படுத்தும் வகையிலும் நமது செயல்பாடுகள் அமைய வேண்டும்.
இந்த விசுவாவசு வருட தமிழ்ப் பத்தாண்டு அனைவரது வாழ்வும் ஏற்றம் பெற உதவ வேண்டும். அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
புதிதாக மலரும் புத்தாண்டு, மக்களுக்கு மகிழ்ச்சியை, நிம்மதியை, பாதுகாப்பை, செல்வங்களை வழங்கும், செல்வத் திருமகள் பீடமான தாமரை மலர்ச்சியை நம் தமிழ்நாட்டில் உறுதி செய்யப்போகிறது.
மக்களுக்கு வாழ்வில் புதிய எழுச்சியையும், மகிழ்ச்சியையும், மாநில வளர்ச்சியையும் வழங்கும் ஆண்டாக இப்புத்தாண்டு மலரட்டும். என்று அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழ் புத்தாண்டின் விசேஷமிக்க தருணத்தில் அனைவருக்கும், குறிப்பாக உலகெங்கிலும் உள்ள எனது தமிழ் சகோதர சகோதரிகளுக்கு அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நாள் நமது பெருமைமிக்க பண்டைய மற்றும் வளமான தமிழ் கலாசாரம் மற்றும் பாரம்பரியம், துடிப்பான நிகழ்காலம் மற்றும் நம்பிக்கைக்குரிய எதிர்காலத்தின் கொண்டாட்டமாகும். புத்தாண்டு அனைவருக்கும் வளம், நல்ல ஆரோக்கியம், புதுப்பிக்கப்பட்ட ஆற்றல் மற்றும் ஏராளமான வாய்ப்புகளைக் கொண்டுவரட்டும்.