அந்த ஒரு கட்சியுடன் மட்டுமே கூட்டணி வைக்க வாய்ப்புள்ளது - கூட்டணி குறித்து சீமான் பதில்
2026 சட்டமன்ற தேர்தலில் ஒரு கட்சியுடன் மட்டும் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதாக சீமான் பேசியுள்ளார்.
வக்ஃப் சட்ட திருத்தம்
வக்ஃப் சட்ட திருத்தத்தை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், " வக்ஃப் வாரிய சட்டத்தில் ஏற்கனவே இருந்த நடைமுறை மாற்றப்பட்டுள்ளது. இந்து மக்களின் வாக்கை ஒருங்கிணைக்கவே பாஜக வக்ஃப் திருத்தச் சட்டம் போன்றவற்றைச் செய்கிறது.
இந்து அறநிலையத்துறையின் சொத்துக்கள் பாதுகாப்பாக உள்ளதா? அதை ஆய்வு செய்ய குழு அமைத்து அதில் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களை உறுப்பினர்களைசேர்த்தால் ஏற்பீர்களா? அப்படி செய்தால் இந்தப் போராட்டத்தை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன்.
2026 தேர்தல் கூட்டணி
அதிமுக பாஜக கூட்டணி குறித்து கேள்வி எழுப்பிய போது, கூட்டணி குறித்து முடிவு எடுக்க வேண்டியது அ.தி.மு.க., அதன் தலைவர்கள். எல்லாத்துக்கும் நாம் கருத்து சொல்வது கண்ணியமாகவோ, நாகரீகமாகவோ இருக்காது.
அதிமுக, திமுக இருவரும் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள். ஊழல், லஞ்சம், சாராயம், கொலை, கொள்ளை, இயற்கை வளங்கள் கொள்ளை, மணல் கொள்ளை என்று எல்லாம் ஒரே மாதிரிதான். இருவரையும் அடித்து துவைப்பதுதான் எங்கள் வேலை என கூறினார்.
2026 தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்க போகிறீர்கள் என கேட்டபோது, “ஒரே ஒரு கட்சியுடன்தான் நான் கூட்டணி வைக்க வாய்ப்பிருக்கு. அது அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் தான்” எனக் கூறிவிட்டு, “இன்னும் எத்தனை காலத்திற்கு இதே கேள்வியை கேட்டுக்கொண்டு இருப்பீர்கள்?” என கூறினார்.
2026 சட்டமன்றத் தேர்தல் 40 முனை போட்டியாக இருந்தாலும் என் முனைதான் கூர்முனை எனக் கூறிக்கொள்கிறேன்" என கூறினார்.