கர்ப்பிணிக்கு ஆட்டோவில் பிரசவம் பார்த்த பெண் போலீஸ் - உதவிய படிப்பு!
பெண்ணுக்கு பெண் காவாலர் ஒருவர் ஆட்டோவிலேயே பிரசவம் பார்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உதவிய பெண் போலீஸ்
திருப்பூர், ஏ.வி.பி பள்ளி அருகே, காவல்துறையினர் வழக்கமான வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது நள்ளிரவு 12 மணியளவில், ஆட்டோவில் பயணித்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பாரதி என்ற பெண், பிரசவ வலியால் துடித்துள்ளார்.
ஆனால், மருத்துவமனைக்குச் செல்வதற்குள் பிரசவம் ஆகிவிடும் என்ற நிலை ஏற்பட்டதால், பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் கோகிலா, ஆட்டோவில் ஏறி அந்தப் பெண்ணுக்குப் பிரசவம் பார்த்தார். அப்பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது.
குவியும் பாராட்டு
தாயும் சேயும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு இருவரும் நலமுடன் உள்ளனர். இந்நிலையில் பெண் காவலர் கோகிலாவின் செயலைப் பாராட்டி, திருப்பூர் மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் நேரில் அழைத்து நன்றி தெரிவித்தார்.
இது குறித்துப் பேசிய கோகிலா, தான் படித்த நர்சிங் படிப்பு இச்சூழ்நிலையில் உதவியது தனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. சொந்த ஊர் சேலம், தற்போது திருப்பூர் எம்ஜிஆர் நகரில் தங்கி, காவல் பணியில் இருந்து வருகிறேன்.
தனது தந்தை ராஜா இப்போது இல்லை. தாய் ஜெயந்தி மற்றும் அக்கா தம்பியுடன் வசித்து வருவதாக தெரிவித்துள்ளார்.