வங்கி கொள்ளை: ஜோதிடம் பார்த்து நகையை மீட்ட போலீசார் - சுவாரஸ்ய சம்பவம்!
வங்கியில் கொள்ளை போன நகைகளை ஜோதிடம் பார்த்தது போலீசார் மீட்டுள்ளனர்.
வங்கி கொள்ளை
கேரளாவில் சிறைத்துறை டி.ஜி.பி.யாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் அலெக்சாண்டர் ஜேக்கப். இவர் பணியில் இருந்தபோது நடந்த சம்பவங்களை தற்போது சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்.
அந்தவகையில் கண்ணூர் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளராக அலெக்சாண்டர் ஜேக்கப் இருந்தபோது ஒரு ருசிகர சம்பவம் நடந்துள்ளது. கடந்த 1990-ம் ஆண்டு கூட்டுறவு வங்கி ஒன்றில் இருந்த 100 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர்.
அந்த காலகட்டத்தில் சிசிடிவி கேமரா உள்பட தொழில்நுட்ப வசதிகள் இல்லை. இதனால் 10 நாட்கள் ஆகியும் நகைகளை மீட்க முடியவில்லை. அந்த கொள்ளையர்கள் குறித்தும் எந்த துப்பும் கிடைக்கவில்லை.
இதனால் ஜோதிடத்தை நாட முடிவு செய்தேன். இதற்காக ஒரு ஜோதிடரை ரகசியமாக சந்தித்து வங்கி கொள்ளை குறித்தும், அதுவரை நடந்த விசாரணை மற்றும் தொடர் விசாரணை தோல்வி குறித்தும் விளக்கினேன்.
இதுதான் உண்மை
அப்போது ஜோதிடர் அந்த வங்கி மேலாளரின் ஜாதகத்தை கொண்டுவர சொன்னார். பின்னர் அந்த ஜாதகத்தை பார்த்து, அதே வங்கியில் வேலை பார்த்து வரும் ஊழியரின் உதவியுடன் தான் கொள்ளை சம்பவம் நடந்துள்ளதாக கூறினார்.
மேலும் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள், வங்கியிலிருந்து கிழக்கு திசையில் 4 கி.மீ தூரத்தில் சாலையோரம், 4 தென்னை மரங்களுக்கு நடுவே அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து அந்த பகுதிக்கு சென்று பார்த்தபோது, ஜோதிடர் கூறியதை போலவே அங்கு ஒரு கிணறு இருந்தது.
இதனால் ஆச்சரிமடைந்த நாங்கள், அதிலிருந்த நீரை மின் மோட்டார் மூலம் வெளியேற்றினோம். அப்போது அந்த கிணற்றில் ஒரு இரும்பு பெட்டி (லாக்கர்) கிடந்தது. அதனைத் திறந்து பார்த்த போது, கொள்ளை போனதாக கூறப்பட்ட 100 பவுன் நகைகள் இருந்தது.
மேலும், அதில் வைக்கப்பட்டிருந்த ரூபாய் நோட்டுகள் தண்ணீரில் நனைந்து சேதம் அடைந்திருந்தது. இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் கொள்ளையர்களும் அதற்கு உடந்தையாக இருந்த வங்கி ஊழியரும் கைது செய்யப்பட்டனர்.
ஆனால், இந்த கொள்ளை வழக்கு தொடர்பான டைரி குறிப்பில், ஜோதிடம் பார்த்து கொள்ளையர்கள் பிடிபட்டதாக எழுதவில்லை. அப்படி எழுதினால் சிரிப்பார்கள் என கருதி எழுதவில்லை. ஆனால், ஜோதிடம் பார்த்து நகையை மீட்டது தான் உண்மை" என்று தெரிவித்துள்ளார்.