மது அருந்த வருபவர்கள் ஓட்டுநருடன் வர வேண்டும் - காவல்துறையின் புதிய கட்டுப்பாடு!
மதுபானக் கூடங்களுக்கு மது அருந்த வருபவர்கள், ஓட்டுநருடன் வர வேண்டும் என மாநகர காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
காவல்துறை
கோவை மாவட்டத்தில் கடந்த 23-ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டியதாக 120 இரு சக்கர வாகனங்கள் ,18 உயர்ரக கார்கள், 52 நான்கு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்து 178 பேர் மீது பதிவு காவல்துறை செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தடுக்கும் வகையில்,கோவை மாநகரில் உள்ள அனைத்து வகை மதுபானக்கூட உரிமையாளர்களுடன் மாநகரக் காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது மது அருந்திய ஒருவருக்குச் சொந்த ஓட்டுநர் இல்லாத நிலையில், மாற்று வாகனத்தை ஏற்பாடு செய்து தர வேண்டும் .
மது அருந்த வருபவர் உரிய வயது உடையவர்தானா , மது அருந்துவோர் வேறு ஏதேனும் போதைப்பொருளை உபயோகிக்கிறார்களா எனப் பார்க்கவேண்டும் என மாநகரக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.மேலும், மதுக்கூடங்கள் மற்றும் வாகனங்கள் நிறுத்தும் இடங்களில் சிசிடிவி கேமரா இயங்குவதைக் கண்காணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
புதிய கட்டுப்பாடு
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட மதுபானக்கூட நிர்வாகம் தவறி அதன் மூலமாக ஏதேனும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட மதுபானக்கூட நிர்வாகத்தின் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மதுபானக்கூட உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி முதன்முறையாக வழக்குப் பதிவு செய்யப்படுவோருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது 6 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே தவறை இரண்டாவது முறையாக செய்வோர் மீது ரூ. 15,000/- வரை அபராதம் அல்லது 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.