8 மாதங்களாக ஃபிரிட்ஜில் இருந்த இளம்பெண் உடல் - அதிர்ந்த போலீசார்
கொலை செய்யப்பட்டு 8 மாதங்களாக ஃபிரிட்ஜில் இருந்த இளம்பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
துர்நாற்றம்
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜயினி, திவாஸ் பகுதியில் தீரேந்திர ஸ்ரீவஸ்தவா என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டில் சஞ்சய் பாடிதார் என்பவர் வாடகைக்கு இருந்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை இந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வந்துள்ளதால், அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் இது குறித்து வீட்டின் உரிமையாளரான தீரேந்திர ஸ்ரீவஸ்தவாவிற்கு தகவல் அளித்துள்ளனர்.
ஃபிரிட்ஜில் உடல்
அப்போது அவர் வீட்டை திறந்து பார்க்கையில் ஃபிரிட்ஜில் இளம்பெண்ணின் உடல் ஒன்று உள்ளது. அந்த பெண் புடவை மற்றும் நகைகள் அணிந்திருந்ததோடு அவரது கைகள் கழுத்துடன் சேர்த்து கட்டப்பட்டிருந்தது.
இது குறித்து உடனடியாக காவல்துறையினருக்கு அளிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், சஞ்சய் பாடிதார், பிங்கி பிரஜாபதி என்ற 30 வயதான பெண்ணுடன் கடந்த 5 ஆண்டுகளாக லிவ் இன் உறவு முறையில் இருந்துள்ளார்.
திருமணத்திற்கு வற்புறுத்தல்
இந்நிலையில் பிங்கி பிரஜாபதி திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புத்தியதால் ஆத்திரமடைந்த சஞ்சய் அவரை கொலை செய்து உடலை ஃபிரிட்ஜில் அடைந்துள்ளார். இந்த கொலை கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றிருக்கும் என காவல்துறையினர் கருதுகின்றனர்.
2023 ஆம் ஆண்டு இந்த வீட்டிற்கு வாடகைக்கு வந்த சஞ்சய் ஒரு வருடத்தில் வீட்டை காலி செய்து விட்டார். ஆனால் தனது உடமைகளை மற்றொரு அறையில் வைத்து விட்டு இதனை பின்னர் எடுத்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்னர் மின்சாரம் துண்டிக்கப்பட்ட போது ஃபிரிட்ஜின் இயங்குவது நின்றுள்ளது. இதனால் ஏற்பட்ட துர்நாற்றத்தால், இந்த கொலை சம்பவம் வெளிவந்துள்ளது.