ரூ.10,000 அபராதம் விதித்த போலீசார்; பூக்களை கொட்டி வியாபாரி போராட்டம் - என்ன நடந்தது..?
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பூக்களை கொட்டி வியாபாரி ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
அபராதம்
நாமக்கல் மாவட்டம் சீதாராம்பாளையத்தை சேர்ந்த ராமன் என்பவர் பூக்கடை ஒன்றை நடத்தி வருகிறார்.
இதற்காக பூசாரிப்பட்டியிலிருந்து மஞ்சள் நிற சாமந்தி பூக்களை வாங்கி தனக்கு சொந்தமான காரின் மேல்பகுதியில் வைத்து கொண்டுவந்துள்ளார்.
ஓமாலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அவர் வந்தபோது, போக்குவரத்து காவல் துறையினர், சரக்கு வாகனம் போல காரில் பூக்களை மூட்டையாக கட்டி எடுத்து வந்தது விதிமீறல் என்று ரூ.10,000 அபராதம் விதித்துள்ளனர்.
போராட்டம்
இதனால் அதிர்ச்சியடைந்த பூக்கடை வியாபாரி ராமன், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பூக்களை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டார்.
சேலம் மாவட்ட நிர்வாகத்துடன் நாமக்கல் ஆட்சியர் கலந்துபேசி தனது அபராத தொகையை ரத்து செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதனையடுத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி நல்லிபாளையம் காவல்துறையினர் அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதையடுத்து கொட்டிய பூக்களை மூட்டையில் கட்டி அங்கிருந்து அவர் எடுத்துச் சென்றார்.