அண்ணாமலையுடன் புகைப்படம் எடுத்த காவலர் - எஸ்.பி பிறப்பித்த அதிரடி உத்தரவு!
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் புகைப்படம் எடுத்த காவலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சீருடையில் புகைப்படம்
பாஜக சார்பில் ஊழலை எதிர்த்து 'என் மண் என் மக்கள்' என்ற பாதயாத்திரையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஈடுபட்டுள்ளார். இந்த பயணத்தில் கடந்த 27ம் தேதி அண்ணாமலை நீலகிரி மாவட்டம் உதகையில், சேரிங்கிராஸ் பகுதியிலிருந்து ஏ.டி.சி. நோக்கி நடைபயணம் மேற்கொண்டார்.
அவருக்கு பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் மலர்கள் தூவி உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். மேலும் பலர் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அப்போது உதகை காஃபிஹவுஸ் சதுக்கத்தில் பணியிலிருந்த 'ஹில் காப்' காவலர் கணேசன் என்பவர் அண்ணாமலையுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
கணேசன் சீருடையில் அண்ணாமலையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. பணியிலிருந்த காவலர் கட்சித் தலைவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
பணியிட மாற்றம்
இந்நிலையில் காவலர் கணேசனை ஆயுதப் படைக்கு மாற்றி எஸ்.பி. பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில் "அரசுப் பணியாளர்கள், தாங்கள் பணியில் இருக்கும்போது, அரசு தொடர்பில்லாத அரசியல்வாதிகளுடன் சேர்ந்து புகைப்படம் எடுக்கக் கூடாது என்பது விதி.
இதை மீறி, சீருடையில் அண்ணாமலையுடன் காவலர் கணேசன் புகைப்படம் எடுத்திருக்கிறார். எனவே, ஒழுங்கு நடவடிக்கையாக அவர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டிருக்கிறார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.