மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை: அமைச்சர் உதயநிதி கேள்வி? அண்ணாமலை பதிலடி!
எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த உதயநிதியின் கேள்விக்கு அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின்
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் "மருத்துவமனையின் கட்டுமானப் பணிக்கான முன் டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கான விண்ணப்ப கால அவகாசத்தை மூன்றாவது முறையாக நீட்டித்துள்ளது ஒன்றிய அரசு.
ஒன்றிய அரசு ஒற்றை செங்கலை வைத்து நான்கு ஆண்டுகள் கடந்த பிறகும் கட்டுமானப் பணிக்காக முன் டெண்டருக்கே இத்தனை கால தாமதம் ஆகிறது என்றால் மருத்துவமனையை கட்டி முடிக்க இன்னும் எத்தனை ஆண்டுகளாகும்? எய்ம்ஸ் கட்டுமானப் பணியை தாமதப்படுத்தி தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கும் ஒன்றிய அரசுக்கு வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்" என்று உதயநிதி பதிவிட்டுள்ளார்.
அண்ணாமலை
இதற்கு பதிலடி கொடுத்த தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை "கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளி கோருவதும், அதற்கான அவகாசத்தை நீட்டிப்பதும் வழக்கமான நடைமுறைதான்.
ஜூனியர் அமைச்சரான உதயநிதி விளையாட்டுத்தனமாக இருக்காமல், தன் கட்சியில் உள்ள சீனியர் அமைச்சர்களிடம், அமைச்சரவை நடைமுறைகளைக் கேட்டுத் தெரிந்து கொள்வது நலம். ஆனால், கருப்புப் பட்டியலில் வைக்கப்பட்ட நிறுவனத்துக்கே, மறுபடியும் ஒப்பந்தம் வழங்கும் திமுகவின் நடைமுறைகள், உலகத்தில் எங்குமே இல்லாத வழக்கம். திமுக விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், 2026 ஆம் ஆண்டு, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் திறந்து வைப்பது உறுதி.
மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதி எண் 54 இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இன்னும் ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கப்படவில்லை என்பதை, விளையாட்டுத் துறை அமைச்சருக்கு நினைவூட்ட கடமைப்பட்டிருக்கிறேன்" என்று அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.