ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி, இயக்குநர் ரஞ்சித் மீது வழக்கு - காவல்துறை அதிரடி!
படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி மற்றும் இயக்குநர் ரஞ்சித் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி
சென்னை பெரம்பூரில் கடந்த ஜூலை 5ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் அயனாவரத்தில் அவர் புதிதாக கட்டி வரும் வீட்டருகே படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக பொன்னை பாலு, அருள், கஞ்சா அஞ்சலை உள்ளிட்ட அதிமுக ,பாஜக ,காங்கிரஸ் என 21 பேரை போலீஸார் கைது செய்தனர்.
மேலும் போலீசாரின் விசாரணையில் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் கொலையில் ஆம்ஸ்ட்ராங்கிற்கு தொடர்பு இருப்பதாக அவருடைய குடும்பத்தினர் கருதியதால் பழிக்கு பழியாக இந்த கொலை நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் போலீசாரின் விசாரணையில் தொடர்ந்து அதிரவைக்கும் தகவல்கள் வெளிவந்து கொண்டே இருக்கிறது.
வழக்கு பதிவு
இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலையின் பின்னணியில் உள்ள குற்றவாளிகளை கைது செய்யக்கோரி நேற்று சென்னை வள்ளுவர்கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி, இயக்குனர் ரஞ்சித் பகுஜன் சமாஜ் கட்சியினர் உள்ளிட்ட 1,500 பேர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் அனுமதி இன்றி போராட்டம் நடத்தப்பட்டதாக கூறி நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி, இயக்குனர் ரஞ்சித் உள்ளிட்ட 1,500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.