பள்ளி ஆசிரியராக பணியாற்றி வந்த பயங்கரவாதி - 22 ஆண்டுகளுக்கு பிறகு கைது!
22 ஆண்டுகள் தலைமறைவாக இருந்து பள்ளி ஆசிரியராக பணியாற்றி வந்த பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளார்.
பயங்கரவாதி
இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம் என்ற தடைசெய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்தவர் ஹனிப் ஷேக் (47). இவர் மீது கடந்த 2001-ம் ஆண்டு டெல்லியில் உள்ள நியூ பிரண்ட்ஸ் காலனி காவல் நிலையத்தில் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து காந்த 2002-ம் ஆண்டு ஹனிப் ஷேக்கை தலைமறைவு குற்றவாளியாக டெல்லி நீதிமன்றம் அறிவித்தது. அப்போதிலிருந்து தலைமறைவாக இருந்து வந்த ஹனிப் ஷேக் பற்றிய தகவல்களை சேகரிக்க டெல்லி போலீஸ் சிறப்புப் பிரிவு ஒரு குழுவை அமைத்தது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் ஜல்காவ் மாவட்டம் புசாவல் நகரிலிருந்த ஹனிப் ஷேக்கை போலீசார் கைது செய்தனர்.
கைது
தலைமறைவாக இருந்த அவர் 22 ஆண்டுகளுக்குப் பிறகு பிடிபட்டுள்ளார். மேலும் ஹனிப் ஷேக் தனது அடையாளத்தை மறைத்துக்கொண்டு, புசாவல் நகரில் ஒரு உருது பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தது கண்டறியப்பட்டது.
அவர் 'சிமி' இயக்கத்தினருடன் தொடர்பு ஏற்பட்ட பிறகு மூளைச்சலவை செய்யப்பட்டு அந்த இயக்கத்தில் சேர்ந்தார். பின்னர் பிற இளைஞர்களை ஹனிப் ஷேக் மூளைச்சலவை செய்து வந்துள்ளார். மேலும், அந்த இயக்கத்தின் பத்திரிகை ஆசிரியராக 2001-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.
அதில் அவரது பெயர் 'ஹனீப் ஹுடாய்' என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆரம்பத்தில், அவரைப் பற்றிய அந்த ஒரு தகவல் மட்டும்தான் போலீசாரிடம் இருந்தது. இந்த தகவல்களை டெல்லி போலீஸ் சிறப்பு பிரிவு துணை கமிஷனர் அலோக் குமார் நிருபர்களிடம் தெரிவித்தார்.