டெல்லியில் உள்ள அரசுப் பள்ளி போல் தமிழகத்தில் மாதிரிப் பள்ளி தொடங்கப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
நாளை டெல்லியில் உள்ள திமுக அலுவலகத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இந்த கட்டிடத்துக்கு அண்ணா- கலைஞர் அறிவாலயம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் இரவு சென்னையிலிருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.
இந்நிலையில், இன்று மேற்கு டெல்லி, வினோத்நகரில் உள்ள அரசு மாதிரி பள்ளியை பார்வையிட்ட தமிழக முதலமைச்சர் அன்று சென்றார்.
பள்ளியை பார்வையிட வந்த முதல்வர் ஸ்டாலினை, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் வரவேற்பு கொடுத்தனர்.
அப்பள்ளி மாணவர்கள், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மலர் கொடுத்து வழங்கி வரவேற்றனர். டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், அங்குள்ள அரசுப் பள்ளிகளில் டிஜிட்டல் முறையில் பாடங்கள் எப்படி கற்பிக்கப்படுகிறது,
ஏசி வகுப்பறைகள் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கூடிய இலவசக் கல்வி எவ்வாறு வழங்கப்படுகிறது என்பது குறித்து விளக்கி கூறினார்.
டெல்லியில் உள்ள அரசு மாதிரிப் பள்ளிகளில் வாரம் ஒருமுறை மகிழ்ச்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகுப்பை குறித்து தமிழக முதலமைச்சர் கேட்டறிந்தார்.
மகிழ்ச்சி வகுப்புகளில், மாணவர்களின் மன அழுத்தங்களைப் போக்கும் வகையில், இசை, யோகா உள்ளிட்டவை கற்பிக்கப்படுகிறது என்பது குறித்து விரிவாக விவரிக்கப்பட்டது.
இதனையடுத்து பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த மாதிரி பள்ளி எப்படி நடந்து கொண்டிருக்கிறதோ, அதேபோல் ஒரு பள்ளியை தமிழகத்தில் விரைவில் நாங்கள் உருவாக்கப் போகிறோம். அதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.
இப்பணிகள் நிறைவடைந்தவுடன் அந்தப் பள்ளியை நாங்கள் திறக்கும் நேரத்தில் நிச்சயமாக டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலை நாங்கள் அழைக்க இருக்கிறோம் என்றார்.