போதைக்காளான் விற்ற விக்டோரியா ராணி; கொரியர் கூட இருக்கு - அதிர்ந்த கொடைக்கானல்!
கொடைக்கானலில் போதைக்காளான் விற்பனை செய்த கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
போதைக்காளான்
மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அங்கு சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதைக் காளான் விற்கும் கும்பல் இயங்கி வந்துள்ளது.
தமிழ்நாட்டை தாண்டி, கேரளா, கர்நாடகா, ஆந்திராவைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களும் கொடைக்கானலுக்கு தேடி வந்து கஞ்சா மற்றும் போதைக்காளான் வாங்கும் நிலை இருந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் போதைக்காளான் தேடி சென்ற இளைஞர் ஒருவர் வனப்பகுதியில் சிக்கினார். அவரை மீட்ட போது போதை காளான் கும்பல் சுற்றுவது தெரியவந்தது.
இதனையடுத்து கொடைக்கானல் டி.எஸ்.பி. மதுமதி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டதில் போதைக்காளானை ரகசியமாக விற்ற, கல்லுக்குழியை சேர்ந்த 56 வயதாகும் சுரேஷ், பள்ளங்கி மாட்டுப்பட்டியை சேர்ந்த 32 வயதாகும் தங்க துரை ஆகியோர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
அதிரடி கைது
மேலும், அவர்களிடம் நடத்திய விசாரணையில் கோக்கர்ஸ் வாக் பகுதியில் போதைக்காளான் விற்பனையில் ஈடுபட்ட சாலமன் (53), ஜெயந்தி (43), விக்டோரியாராணி (28) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் "போதைக்காளான் விற்பனைக்கு தங்க துரை மூளையாக செயல்பட்டுள்ளார். சாலமன் மற்றும் அவரது குடும்பத்தினர், கொரியர் சர்வீஸ் நடத்தி வந்துள்ளனர். ரகசியமாக கொரியர் மூலம் வெளி மாநிலங்களுக்கு அனுப்பி விற்பனை செய்துள்ளனர்.
மேலும் தெரிந்த நபர்களுக்கு மட்டுமே போதைக்காளான் விற்றுள்ளனர். வெளி மாநில சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமே அதிக அளவில் வெளியே தெரியாதவாறு நூதன முறையில் போதைக்காளான்களை விற்பனை செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் அருண் (35), ஹெலன்மேரி (23) ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.