1997 ல் 60 ரூபாய் வழிப்பறி - 27 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்த காவல்துறை
60 ரூபாய் வழிப்பறி செய்தவரை 27 ஆண்டுகளுக்கு பிறகு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
60 ரூபாய் வழிப்பறி
மதுரை அண்ணாநகர் ஜக்காதோப்பு பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(55). இவர் கடந்த 1997 ஆம் ஆண்டு 60 ரூபாயை வழிப்பறி செய்துள்ளார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த தெப்பக்குளம் காவல்துறையினர், பன்னீர்செல்வத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
தலைமறைவு
இதன் பின்னர் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் பன்னீர்செல்வம் தலைமறைவானார். காவல்துறையினர் பல இடங்களில் தேடிய போதும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனையடுத்து பன்னீர்செல்வத்தை பிடிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது.
இந்நிலையில் நிலுவையில் உள்ள வழக்குகளை முடிப்பதற்காக மதுரை மாநகர சிறப்பு தனிப்படை காவல்துறை உதவி ஆணையர் சூரக்குமார் தலைமையில் காவல்துறையினர் பழைய வழக்குகளை ஆய்வு செய்தனர். இதில் வழிப்பறி வழக்கில் தலைமறைவான பன்னீர்செல்வம் குறித்து, ஜக்காதோப்புக்கு சென்று தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
கைது
விசாரணையில் பன்னீர்செல்வம் குடும்பத்துடன் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் வசிப்பதாக தகவல் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சிவகாசிக்கு விரைந்த தனிப்படை காவல்துறையினர், மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆய்வு செய்வதாக கூறி, பன்னீர்செல்வம் குடும்பத்தினரிடம் பெயர், விபரங்களை கேட்டு உறுதி செய்தனர்.
இதனையடுத்து சிவகாசி டாஸ்மாக் பார் ஒன்றில் வேலை செய்த பன்னீர்செல்வத்தை கைது செய்தனர். 27 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை கைது செய்த சிறப்பு தனிப்படை காவல்துறையினரை காவல் ஆணையர் லோகநாதன் பாராட்டினார்.