ஜெயலலிதா குறித்த கேள்வி; உட்கார்ந்ததால் வழக்கு - 10 ஆண்டுக்கு பின் விடுதலை
விசாரணையின் போது எழுந்து நிற்காத வழக்கில் ஆர்டிஐ ஆர்வலர் 10 ஆண்டுகளுக்கு பின் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தகவல் அறியும் உரிமை சட்டம்
மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்லும் தகவல் அறியும் உரிமை சட்டம்(RTI) 2008 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது.
இதன் மூலம் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான தகவலை முறைப்படி கேட்டு பெறலாம். இதற்கு மத்திய, மாநில தகவல் ஆணையம் சார்பில் குறிப்பிட்ட காலத்துக்குள் பதில் அளிக்கப்படும்.
ஜெயலலிதா குறித்த கேள்வி
இந்த நிலையில் ஊழலுக்கு எதிராக செயல்பட்டு வரும் சட்ட பஞ்சாயத்து இயக்கத்தை சேர்ந்த சிவ இளங்கோ என்பவர், ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது அதிமுக அரசு சார்பில் நாளிதழ்களில் விளம்பரத்துக்கு எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது? என்ற தகவலை வழங்க ஆர்டிஐயில் கேள்வி கேட்டார்.
அவரது கேள்விக்கு அரசு சார்பில் குறிப்பிட்ட காலத்தில் பதில் அளிக்காத நிலையில் சிவ இளங்கோ மேல்முறையீடு செய்தார். 2015 ஆம் ஆண்டு இந்த மேல்முறையீடு மீதான விசாரணை தகவல் ஆணையத்தில் வந்தது.
தலைமை தகவல் ஆணையர் கே.எஸ்.ஸ்ரீபாதி மற்றும் முன்னாள் மாவட்ட நீதிபதி எஸ்.எஃப்.அக்பர் ஆகியோர் விசாரித்தனர். விசாரணையின்போது சிவ இளங்கோ அமர்ந்து இருந்ததால் அவரை எழுந்து நிற்கும் படி கே.எஸ்.ஸ்ரீபாதி மற்றும் எஸ்.எஃப்.அக்பர் உள்ளிட்டவர்கள் கூறினர்.
நிற்க மறுத்ததால் வழக்கு
தகவல் ஆணையர் முன்பு எழுந்து நின்றுதான் பதில் சொல்ல வேண்டும் என்று எங்கு கூறவில்லை என தெரிவித்து எழுந்து நிற்க மறுத்தார். இதையடுத்து அவரது மேல்முறையீடு மனு விசாரணையின்றி தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை கண்டித்து சிவ இளங்கோ தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்பட பல பிரிவுகளில் அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர். புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவர் 3 நாள் கழித்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இருப்பினும் அவர் மீதான வழக்கு சென்னை சைதாப்பேட்டை 138 வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நடந்து வந்தது. இந்த வழக்கில் 138 முறை விசாரணை நடத்தப்பட்ட நிலையில், தனக்கு என்று வழக்கறிஞர் யாரையும் வைக்காத சிவ இளங்கோ தானே நீதிமன்றத்தில் தொடர்ந்து வாதாடி தன்தரப்பு வாதங்களை முன்வைத்தார்.
இந்நிலையில் சிவ இளங்கோ மீது எந்த தவறும் இல்லை என கடந்த 15.10.2024 அன்று நீதிமன்றம் இந்த வழக்கில் இருந்து அவரை விடுத்துள்ளது.