கழிவறையில் தாக்கிய விஷ வாயு; அடுத்த அடுத்து பலியான 3 பெண்கள் - அதிர்ச்சி சம்பவம்!
வீட்டின் கழிவறைக்கு சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
விஷ வாயு
புதுச்சேரி மாநிலம், ரெட்டியார்பாளையம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த செந்தாமரை (72) என்ற மூதாட்டி ஒருவர் கழிவறைக்கு சென்ற போது திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
அங்கு அவரது அலறல் சத்தம் கேட்டு அவரை மீட்பதற்காக மகள் காமாட்சி கழிவறைக்குள் சென்றபோது அவரும் மயங்கி விழுந்தார். இதனை பார்த்த பேத்தி பாக்கியலட்சுமி (15) இருவரையும் காப்பாற்ற ஓடியதில் அவரும் அங்கேயே மயங்கி விழுந்தார்.
இவர்கள் மூவரும் மயங்கி இருப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனே அவர்களை மீது மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு செந்தாமரை மற்றும் அவரது மகள் காமாட்சி ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர்.
பெண்கள் பலி
சிறுமி பாக்கியலட்சுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரும் பலனின்றி உயிரிழந்தார். இந்த தகவலறிந்து வந்த போலீஸார், வருவாய்த் துறையினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் மருத்துவக் குழுவினர், உள்ளிட்டோர் வட்டாட்சியர் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அப்பகுதியை ஆய்வு செய்த போது பாதாள சாக்கடையில் கடந்த சில நாட்களாக அடைப்பு இருந்ததாகவும், இதை நகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
இதன் காரணமாக விஷவாயு உருவாகி செந்தாமரையின் வீட்டில் இருந்த கழிவறையில் வாயு வெளியேறியதில் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மேலும், விஷ வாயு தாக்க வாய்ப்புள்ளதால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வீட்டை விட்டு வெளியேறுமாறு போலீசார் மற்றும் நகராட்சி ஊழியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.