திமுகவை நெருங்கும் பாமக; திமிறும் திருமா - மாறுகின்றனவா கூட்டணிக் கணக்குகள்?
சில நாட்களுக்கு முன்பு ஒரு ஆங்கிலப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், திமுக கூட்டணியில் பாமக இணைவதாக வரும் செய்திகள் வதந்தி என மறுத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.
திமுகவை நெருங்கும் பாமக
ஆனால் வதந்தி உண்மையாவதற்கான காலம் நெருங்கி வருகிறது என்கிறார்கள் திமுகவின் நடவடிக்கைகளை உற்று கவனிப்பவர்கள். அதிமுக பாஜக கூட்டணி அமைக்கப்பட்ட நிலையில் அதில் இன்னும் பல கட்சிகளை இணைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறிப்பாக தவெக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளை இணைத்து திமுகவிற்கு எதிராக வலுவான கூட்டணி அமைப்பதற்கான முயற்சிகளை அதிமுகவும் பாஜகவும் முன்னெடுத்து வருகின்றன. அதற்கு எதிர்வினையாற்ற வேண்டிய கட்டாயத்தில் திமுகவும் இருக்கிறது. 2017 தொடங்கி தனது கூட்டணியை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறது திமுக.
சில சலசலப்புகள் இருந்தாலும் மூன்று தேர்தல்களில் வெற்றி பெற்ற கூட்டணியாக அந்தக் கூட்டணி இருக்கிறது. ஏற்கனவே இருக்கும் கட்சிகளுக்கு சீட்டுகளை ஒதுக்குவதே திமுகவிற்கு சவாலாக இருக்கும் நிலையில் பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை கூட்டணியில் இணைக்கும் எண்ணத்தில் திமுக இருப்பதாக சொல்லப்படுகிறது.
திருமா மறுப்பு?
2021ல் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றியதில் இருந்து வடமாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமிக்கான ஆதரவு அதிகரித்திருக்கிற்து. ஒருவேளை விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் அந்தக் கூட்டணியில் இணையும் போது வட மாவட்டங்களில் வலுவான கூட்டணியாக அந்தக் கூட்டணி மாறும் வாய்ப்பிருக்கிறது.
விஜய்க்கு வடமாவட்டங்களில் அதிக ஆதரவு இருப்பதாக தகவல்கள் வருகின்றன. விஜய் கட்சி தொடங்குவதாக அறிவித்தவுடன் கிளைக் கழகங்களைத் தொடங்கி ஊர் ஊருக்கு கட்சி போர்டுகளை வைத்ததில் வட மாவட்டங்கள் முன்னணியில் இருந்தன. இந்த முயற்சிக்கு கவுண்டர் கொடுப்பதற்காக பாமகவை கூட்டணியில் இணைப்பது பற்றி திமுக யோசித்து வருவதாக கூறப்படுகிறது.
பாமக இருக்கும் கூட்டணியில் இருப்பதில்லை என்ற நிலைப்பாட்டில் விசிக இருந்து வருவதால், திருமாவளவனைச் சமாதானம் செய்து 2011ல் நடந்தது போல பாமக விசிகவை ஒரே கூட்டணியில் தக்க வைப்பது குறித்தும் ஆலோசனைகள் நடந்து வருகின்றன. இந்த அறிகுறிகளை உணர்ந்ததால்தான் மத்திய அரசில் இருக்கும் ஒரு பெரிய அதிகாரி மூலம் பாஜக கூட்டணிக்கு அழைக்கப்பட்டதாகவும், தான் அதை மறுத்து விட்டதாகவும் கூறிய திருமாவளவன் மதவாத, ஜாதியவாத சக்திகளுடன் கூட்டணி கிடையாது என அறிவித்துள்ளார்.
மாறுமா கூட்டணி?
அதே நேரம் சமீப காலமாக விஜய்யை நேரடியாகவும் மறைமுகமாகவும் விமர்சித்து வருகிறார் திருமாவளவன். விஜய் கூட்டணி அமைக்க முயன்றதாகவும் தான் அந்தக் கதவை அடைத்து விட்டேன் என்று சொன்னவர், ஏசி ரூமில் இருந்து அரசியல் செய்கிறார்கள் என்ற விமர்சனத்தையும் வைத்திருக்கிறார்.
இதில் இன்னொரு கணக்கும் இருக்கிறது. விசிக விஜய்யுடன் கூட்டணி அமைக்கலாம் என்ற கருத்துகள் சில விசிகவினராலேயே பேசப்பட்டு வந்தன. பாமக ஆப்ஷனை திமுக திறந்து வைத்ததற்கு அதுவும் ஒரு காரணமாக சொல்லப்பட்டது. பாமக மீதும் விஜய் மீதும் திருமா ஒரே நேரத்தில் விமர்சனம் வைப்பதைப் பார்க்கும் போது, பாமகவை சேர்க்க வேண்டாம் என திமுகவிற்கு செய்தி சொல்வது போல் தெரிகிறது.
திமுகவைப் பொறுத்தவரை பாமகவை விட விசிகவே சிறந்த தேர்வாக இருந்திருக்கிறது. விசிகவிற்கும் இப்போது திமுக கூட்டணியே சிறந்த தேர்வாக இருக்கும் நிலையில் இரண்டு தரப்பிலும் முன்னெடுக்கப்படும் இந்த திரை மறைவு வேலைகளின் காரணம் விரைவில் வெளிச்சத்திற்கு வரும். தேர்தலுக்கு இடைப்பட்ட இந்த 10 மாதங்களில் இன்னும் எத்தனை திரைமறைவு அரசியல் செய்திகள் வெளிச்சத்திற்கு வரப்போகிறதோ தெரியவில்லை.